திடீரென சமையலறையில் ஏற்பட்ட தீவிபத்தின் போது டெலிவரி ஊழியர் ஒருவர் தைரியமாகச் செயல்பட்டு தீயை அணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்தவர் மருத்துவர் ஷிவாங்கி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த பார்சலை பெறுவதற்காக வாசற்படிக்கு வந்திருந்தார். பார்சலை பெற்றிடக்கொண்டிருந்த சமயத்தில், வீட்டில் புகை மூட்டம் ஏற்பட்டதைக் கண்டு ஷிவாங்கி உள்ளே ஓடினார். அப்போது, சமையலறையில் அடுப்பின் மேல் இருந்த பாத்திரத்திலிருந்த எண்ணெய் சூடாகித் தீப்பற்றிக்கொண்டது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷிவாங்கி, அந்த தீயை அணைக்க முயன்றார். ஆனாலும், அந்த தீயை அணைக்க அவரால் முடியவில்லை. இதையடுத்து, அவசர நிலையைப் புரிந்துகொண்டு உள்ளே வந்த டெலிவரி ஊழியர், சற்றும் தாமதிக்காமல் தைரியமாகச் சமையலறைக்குள் சென்று அங்கிருந்த துணையை எடுத்து எரிந்துகொண்டிருந்த பாத்திரத்தின் மீது போர்த்தினார். இதையடுத்து, எரிந்து கொண்டிருந்த தீ அணைந்துவிட்டது. இதனால், எந்த வித ஆபத்தும் இன்றி அவர் மற்றும் வீடு காப்பாற்றப்பட்டதையடுத்து, ஷிவாங்கி நிம்மதி பெரு மூச்சுவிட்டார்.
இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஷிவாங்கி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கு மனமார ”நன்றி” தெரிவித்தார்.
இது குறித்து அந்த பதிவில், ”நேற்று இரவு, ஒரு டெலிவரி ஊழியர் எங்கள் வீட்டிற்கு பார்சல் ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போது, எங்கள் வீட்டின் சமையலறையில் தீப்பிடித்துக்கொண்டது, ​​அதை எப்படி அணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் உடனடியாக வந்து, எந்தத் தயக்கமும் இன்றி எனக்கு உதவினார். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அவர் எனக்கு உணர்த்தினார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் சரியான வார்த்தைகள் இல்லை என்றாலும், அவர் செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
