“இந்திய சினிமா பின்னோக்கி சென்றுவிடும்…” – காரணத்துடன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த யஷ்

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கடந்த ஜூலையில் வெளியான படத்தின் முதல் டிரெய்லர் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லாததாக விமர்சனங்கள் எழுந்தது. பின்பு அண்மையில் வெளியான புது டிரெய்லர் அந்த விமர்சனங்களை சரி செய்தது. 

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் பட புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் மும்பை, பெங்களூருவைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்தது. அதில் பேசிய யஷ், “நமது இந்திய இதிகாசத்தை உலக மேடையில் கொண்டு செல்வதற்காக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது பணம், புகழ் அனைத்தையும் பந்தயம் கட்டி இறங்கியுள்ளார். தயவுசெய்து விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் சின்ன குறைகளை தேடாதீர்கள். இவரைப் போன்றவகள் நம்மிடம் இல்லாமல் போனால் மீண்டும் இது போன்ற முயற்சிகள் நடக்க நீண்ட ஆண்டுகள் ஆகலாம். அதனால் நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். அனைத்துத் திரைத்துறை ரசிகர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான். இந்த ஒரு முறை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது இந்தியக் கதையின் பிரமாண்டத்தை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.