கர்நாடகாவில் நிகழ்ந்த தசரா விழாவின் போது யானை ஒன்று மதம் பிடித்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் தசரா விழா கொண்டாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஷிவமோக தசரா விழா கொண்டாட்டத்திற்காக இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டது. அதில் சோமன்னா என்ற யானை புதிதாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக சாகர் என்ற யானை தசரா விழாவில் பயன்படுத்தப்படும் நிலையில் அந்த யானைக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அதற்கு பதிலாக முதல்முறையாக சோமன்னா யானை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
350 கிலோ எடை கொண்ட அம்பாரியை சுமந்து கொண்டு யானை சென்று கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட நெரிசல் மற்றும் அங்கு ஒலித்த சத்தத்தைக் கேட்டு மிரண்ட யானை திடீரென அலறி அடித்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த காரை தூக்கி அடித்துப் பந்தாடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சோமன்னா யானை மிரண்டு ஓடியதைக் கண்டு மற்றொரு யானையும் மிரண்டு ஓடியது.
இரண்டு யானைகளையும் கட்டுப்படுத்த யானை பாகன்கள் முயன்ற நிலையில் முடியாதால் வனத்துறை அதிகாரிகள் துரிதமாக வந்து யானைக்கு சங்கிலி போட்டி அதனை சாந்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கும்கி யானைகள் உதவியோடு யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
