காணாமல் போன 8 வயது சிறுமி… ஆயுத பூஜை கொண்டாட்டத்தால் காவல்துறை அலட்சியம்?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஹேமாவதி என்ற சிறுமி, தனது பெற்றோருடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு இரவு வீட்டில தூங்கிக் கொண்டிருந்தபோது மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, தனிப்படைகள் அமைத்தும் போலீசார் அந்த சிறுமி இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் எட்டு வயது சிறுமி காணாமல் போன விவகாரம் மேலும் பரபரப்பாகியது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 8 வயதில் பெஸ்டி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி கல்பனா ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தனது மகளைத் தனது பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அருகில் வசிக்கும் மற்றொரு வடமாநிலக் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார், சிறுமியின் உணவுச் செலவுக்காக பணமும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் கருமாங்கழனி, வடமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுமியைத் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தும் வட மாநிலத்தவர் என்பதால் அலட்சியத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் செஞ்சி சிறுமி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில சிறுமி காணாமல் போன தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரே ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இரண்டு நாள் கழித்து அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மற்றும் டிஎஸ்பி கீர்த்திவாசன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மோப்ப நாய்களின் உதவியுடனும், கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தும், ட்ரோன் கேமரா மூலம் சிறுமையை தேடி வந்தனர்,  ஆட்டோவில் சவுண்ட் பாக்ஸ் வைத்து சிறுமி காணாமல் போனதை தெரிவிப்பதற்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பை போலீசார் வெளியிட்டனர், மேலும் ஸ்ரீபெரும்புதூர் ,பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சிறுமி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றதாகத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது, சிறுமி பூந்தமல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றதாகப் பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள ரயில்வே காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சனிக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் ஒரு சிறுமி  சுற்றித் திரிந்ததை பார்த்த ரயில்வே காவல்துறையினர், சிறுமியை மீட்டு சென்னை கெல்லிஸ் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், ரயில்வே துறையினர் எடுத்திருந்த சிறுமியின் புகைப்படம், மாயமான பெஸ்டியின் அடையாளங்களுடன் ஒத்துப்போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கெல்லிஸ் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று சிறுமி பெஸ்டியை மீட்டனர்.

இந்த சிறுமி அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காணாமல் போன நிலையில் அடுத்த நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு அந்த குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். புகார் கொடுத்த அன்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை உடனடியாக கண்டுபிடித்து இருக்கலாம், வட மாநிலத்தவர் என்ற அலட்சியத்தால் தாமதப்படுத்தப்பட்டு ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டது கூட தெரியாமல், பல தரப்பு தேடுதல் வேட்டை, ஐந்து தனிப்படை, ஆட்டோவில் பிரச்சாரம், போஸ்டர் ஒட்டுதல் என்ற பெயரில் அரசு பணத்தை வீணடித்துள்ளனர். 

சிறுமியின் புகார் வந்த சனிக்கிழமை ஆயுத பூஜை கொண்டாட்டத்தால் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கம்பெனி கம்பெனியாக வசூலில் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் இந்த வழக்கை அலட்சியப்படுத்திய நிலையில் ஊடகத்தில் எந்த செய்தி பரவியதால் ஏற்கனவே செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரமும் இத்துடன் சேர்ந்து பூதாகரமானதால் போலீசார் கவனம் இந்த சிறுமி பக்கம் திரும்பியது. பொதுவாக சென்னை அதன் சுற்றுப்புறத்தில் சிறுவர், சிறுமிகள் அல்லது மாணவர்கள் அல்லது பெரியவர்கள் யார் காணாமல் போனாலும், முக்கிய ரயில் நிலையங்களில் குறிப்பாக சென்ட்ரல், எக்மோர், தாம்பரம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் விசாரணை நடத்துவார்கள். ஆனால் இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தவறவிட்டது ஆயுத பூஜை கொண்டாட்டமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.?