–நமது நிருபர்-
விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து, ஐரோப்பிய நாடான பிரான்சில் போராட்டங்கள் நடந்து வருகின்றன; இது வன்முறையாக மாறியது.
பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘பிரான்ஸ் முஸ்லிம்களின் நாடாக மாறி வருகிறது. முதலில் தன் எல்லைகளை அந்த நாடு மூட வேண்டும். வெளிநாட்டினர் அங்கு குவிவதை தடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்பை கடுமையாக சாடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளதாவது: பிரான்சில் நடக்கும் சில பிரச்னைகளை, பதற்றமான சூழ்நிலையை சில வெளிநாட்டுத் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதற்காக பொய்யான தகவல்களை கூறி பிரச்னைகளை தீவிரப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல் போன்ற அரசியல் காரணங்களுக்காக சில தலைவர்கள் இது போன்று செயல்படுகின்றனர். அவர்கள் கூறுவதுபோல், பிரான்சில் முஸ்லிம்கள் அதிக அளவில் இல்லை. குடியேற்றப் பிரச்னைக்கும், தற்போதைய பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இதுபோன்ற ஏற்க முடியாத முட்டாள்தனமான பேச்சுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் சமூக வலைதளங்களிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான, பொய்யான படங்கள், தகவல்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
