புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அரசுமுறைப் பயணமாக டில்லி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி நேரில் சென்று வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.
உயர்மட்ட பேச்சுவார்த்தை:
டொனால்ட் டஸ்க், போலந்து பிரதமராக இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறை. முன்னதாக 2010ம் ஆண்டு அவர் இந்தியா வந்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் மோடி போலந்து சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இன்று பிரதமருடன் ஆலோசனை
டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, டொனால்ட் டஸ்க் நேரில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பெங்களூருவில்…
இன்று புதுடில்லியிலும், நாளை பெங்களூருவிலும் இந்தியா – போலந்து வர்த்தகக் கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, போலந்து பிரதமருடன் அந்நாட்டின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் ஆண்ட்ரேஜ் டொமான்ஸ்கி மற்றும் வர்த்தகக் குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.
பெங்களூரு பயணத்தின் போது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை சார்ந்த தொழிலதிபர்களை போலந்து பிரதமர் சந்தித்துப் பேச உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பிணைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த வருகை பெரும் வாய்ப்பாக அமையும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
