சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு முரசு என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை இந்தியா பரிந்துரைத்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு புயலாக மாறினால் அதற்கு முரசு புயல் என பெயரிடப்படும். இந்த பெயரை இந்தியா பரிந்துரைத்தது. வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர் சூட்டும் குழுவிடம் இந்தியா பரிந்துரைத்துள்ளது.
முரசு என்றால் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியாகும். பண்டை காலத்தில் போர் அறிவிப்பு, செய்தி அறிவிப்பு, முக்கியச் செய்திகளை மக்களுக்கு பறைசாற்ற முரசு பயன்படுத்தப்பட்டது. எனவே புயலுக்கு முரசு என்ற பெயர் சூட்டப்படுவதால் இது இந்தியாவுக்கு என்ன செய்தியை சொல்ல போகிறது, முரசு சப்தம் அதிகமாக கேட்பதை போல் மழையும் அதிகமாக இருக்கும எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
புயல்களுக்கு பெயரிடப்படும் பழக்கம் 2004 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி வெவ்வேறு திசையில் நகரும். அப்போது அந்த புயல்களை மக்களுக்கு அடையாளம் காட்டவே இந்த பெயரிடும் பழக்கம் உருவானது.
உலக அளவில் புயல்கள் குறித்த அறிவுரைகளை வழங்குவது , அவற்றுக்கு பெயர் சூட்டுவது போன்ற அதிகாரம் 6 வானிலை மையங்களுக்கும், 5 புயல் எச்சரிக்கை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த 6 வானிலை மையங்களில் இந்தியாவும் ஒன்று!
