பிரபல பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். தமிழில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அண்மையில் மறைந்த தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது ஆஸ்தான பாடகராகவும் இருந்து வந்தார். இந்த சூழலில் தேவா மறைந்து சில நாட்களிலே இவரும் மறைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’, ‘வெள்ளரிக்கா வெள்ளரிக்கா’, ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்’, ‘மீசக்கார நண்பா(சோகம்)’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஈச்சி எலுமிச்சி’(தாஜ்மஹால்), யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘அய்யய்யோ’(பருத்திவீரன்), ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’(கழுகு) உள்ளிட்ட ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். கடைசியாக ஜிவி பிரகாஷ் இசையில் ‘நாலு நிமிஷம்’(சூரரைப் போற்று) பாடலை பாடியிருந்தார்.
இதையடுத்து 5 ஆண்டுகளாக பாடாமல் இருந்த அவர் கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
