விழுப்புரம் சிறுமி மாயமான வழக்கு : 10 நாட்களைக் கடந்து துப்பு கிடைக்காமல் நிலவும் மர்மம்- சிபிசிஐடி விசாரணையில் சொல்வது என்ன? – villupuram gingee hemavathi 7 year old girl missing case cbcid investigation updates

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் – பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமவதி . 7 வயதான இந்தச் சிறுமி, அருகிலுள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். வடிவேல் – பவானி இருவரும் கூலித் தொழிலாளிகள். மிகவும் எளிய நடுத்தர குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.

விழுப்புரம் சிறுமி மாயமான வழக்கு

கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹேமாவதிக்கு 7-வது பிறந்தநாள். கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோராக இருந்தாலும், மகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட நினைத்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் ஒரு கிலோ கேக் வாங்கி வெட்டி கொண்டாடியுள்ளனர். அக்கா விஜயலட்சுமிக்கு வீடியோ கால் செய்து பேசி, சிரித்து மகிழ்ந்த அந்த பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் தவழ்ந்த புன்னகை அனைவரையும் நெகிழ வைத்தது.பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர், இரவில் தாய் பவானி மற்றும் பாட்டி சாந்தியுடன் வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார் ஹேமாவதி. தந்தை வடிவேல் வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 5:30 முதல் 6:00 மணி அளவில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, தாயின் அருகில் படுத்திருந்த ஹேமாவதியைக் காணவில்லை.

இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே சென்றிருக்கலாம் என எண்ணி 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த குடும்பத்தினர், குழந்தை நீண்ட நேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்து ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், பதறியடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

10 நாட்களாக சல்லடை போட்டுத் தேடிய தனிப்படை

புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடங்கியது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன; ட்ரோன் கேமராக்கள் மூலம் சுற்றியுள்ள விளைநிலங்கள், புதர்கள் கண்காணிக்கப்பட்டன.

வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) ஏதேனும் திறந்த நிலையில் உள்ளதா என்று பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தன. ஆனால், வீட்டின் அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணறு எதுவும் இல்லை என்பது தெளிவானது.

இருப்பினும், வீட்டின் பின்புறம் சுமார் 50 அடி தொலைவில் இருந்த விவசாயக் கிணறு உட்பட, சுற்றிலும் பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த ஏராளமான விவசாயக் கிணறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சுருக்குமடி வலைகளை வீசி போலீசார் சல்லடை போட்டுத் தேடினர். ஆனால் எந்தவொரு இடத்திலும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. இதனால் சிறுமி உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்வி தீவிரமடைந்தது.

போலீசார் விசாரித்த 11 முக்கிய கோணங்கள்

10 நாட்களாகத் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். தாய், தந்தை மற்றும் பாட்டியின் வாக்குமூலம்: இரவில் கதவு தாழிடப்பட்டிருந்ததா, அதிகாலை யார் முதலில் விழித்தார்கள் என்ற அடிப்படையில் குடும்பத்தினரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி தவறி விழுந்திருக்க வாய்ப்புள்ளதா என அனைத்து நீர்நிலைகளிலும் முழுமையாகத் தேடி அந்த சந்தேகம் களையப்பட்டது. பிறந்தநாள் கேக் வாங்கித் தந்தது யார்?சிறுமியின் அக்கா விஜயலட்சுமிக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு தூரத்து உறவுக்கார இளைஞர்தான் பிறந்தநாள் கேக் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அக்காவின் தொடர்பு: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை மருத்துவப் பயிற்சி பெற்று வரும் மூத்த மகள் விஜயலட்சுமியிடம், பிறந்தநாள் அன்று அந்த இளைஞரின் செல்போன் மூலமாக வீடியோ காலில் பேசியது குறித்து விசாரிக்கப்பட்டது. சிறுமி மாயமான அன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், “அம்மா… அம்மா…” என்று சிறுமியின் அழுகுரல் கேட்டதாகவும், அப்போது நாய் ஒன்று குரைத்துக்கொண்டு சுடுகாட்டுப் பகுதி நோக்கி ஓடியதாகவும் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்மணி மஞ்சுளா தெரிவித்தார். தான் திண்ணையில் படுத்திருந்ததாகவும், பயத்தில் எழுந்து சென்று பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சுடுகாட்டுப் பாதை சோதனைகள்: நாய் குரைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட மயானப் பாதைகள், சுடுகாட்டுப் பகுதிகள் மற்றும் அடர்ந்த புதர்களில் தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டது.

சிவன் கோயில் சாமியார் மாயம் – நரபலி வதந்தி

ஆலம்பூண்டி சிவன் கோயிலில் தங்கி சோதிடம் பார்த்து வந்த சாமியார் ஒருவர், சிறுமி மாயமான அன்றே தனது இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டுச் சென்றார். ஊருக்குள் ‘நரபலி’ கொடுக்கப்பட்டிருக்கலாம் என வதந்திகள் பரவியதால், அவர் மீது சந்தேகம் வலுத்தது. அவரது செல்போன் சிக்னலைத் தொடர்ந்து விழுப்புரம் அருகே பேருந்தில் சென்ற அவரைப் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்தனர்.
ஊர் மக்கள் தன் மீது பழி போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் தான் ஊரை விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார். தீவிர ஆய்வுக்குப் பின் அவருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது.

நள்ளிரவு மர்ம செல்போன் அழைப்புகள்

அப்பகுதியில் உள்ள மூன்று செல்போன் டவர்களில் பதிவான 6,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், உள்ளூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சிறுமி மாயமான நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பலமுறை ஒருவருக்கொருவர் பேசியது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்றாக மது அருந்திவிட்டு வீடு திரும்பிய பின் போனில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறினர்.

வனவிலங்குகள் கவ்விச் சென்றதா?
கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிறுத்தை, புலி போன்ற ஆபத்தான வனவிலங்குகள் இல்லை என்பதால், விலங்குகள் தூக்கிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் மற்றும் போலீசார் உறுதி செய்தனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள் நடமாட்டம்?
கரும்பு வெட்டுவதற்கும், நெல் நாற்று நடுவதற்கும் அப்பகுதிக்கு வந்து சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன.

அதிகாலையில் மாயமா அல்லது நள்ளிரவில் கடத்தலா?

சிறுமி தானாகவே எழுந்து வெளியே சென்றாரா அல்லது நள்ளிரவில் மர்ம நபர்கள் எவரேனும் வீட்டுக்குள் நுழைந்து கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் மர்மம் நீடிக்கிறது.

என் புள்ள கிடைக்குமாங்கிற நம்பிக்கையே போச்சு.. – தாயின் கண்ணீர் மடல்

10 நாட்களாகியும் தன் மகளைப் பற்றி எந்தவொரு துப்பும் கிடைக்காததால் தாய் பவானி கண்ணீர் மல்கக் கதறி அழுது வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

“பத்து நாளா போலீஸ் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கல. என் புள்ள உசுரோட கிடைக்குமாங்கிற நம்பிக்கையே எனக்குப் போயிடுச்சு.

இப்ப சிபிசிஐடி போலீஸ் வந்து விசாரிக்குறாங்க. அவங்க விசாரிக்கிறதப் பார்த்தா என் புள்ள கிடைச்சிரும்னு ஒரு பக்கம் நம்பிக்கை வருது. ஆனாலும் எங்கள எதுவும் மிரட்டுவாங்களோ, அடிப்பாங்களோன்னு பயமாவும் இருக்கு. நாங்க எந்தத் தப்பும் செய்யல. கூலி வேலை செஞ்சு பொழைக்க்குறவங்க. எப்படியாவது என் புள்ளைய உயிரோட மீட்டுக் குடுத்துடுங்க ஐயா…” என்று கதறினார்.

சிபிசிஐடி வசம் வழக்கு: களத்தில் பெண் அதிகாரிகள்

தனிப்படை போலீசாரின் 10 நாள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், தமிழக டிஜிபி இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள் ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் வந்து, உள்ளூர் போலீசாரிடம் இருந்த வழக்கு ஆவணங்களை முழுமையாகப் பெற்றுக் கொண்டனர். சிறுமி தொடர்பான வழக்கு என்பதால், குடும்பத்தினர் மற்றும் பெண்களிடம் சுமுகமாக விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி குழுவில் இரண்டு பெண் காவல் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தை மீண்டும் நேரில் ஆய்வு செய்து, தாய், தந்தை மற்றும் பாட்டியிடம் மறுவிசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Source link