தற்காலத்தில், தொடர்ந்து அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 1, முதல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மொபைலில் உள்ள ஆக்டிவ் சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வேலை செய்யும். ஒருவேளை மொபைலில் இருந்து குறிப்பிட்ட சிம் கார்டை கழற்றினாலோ, வேறு சிம் கார்டை மாற்றினாலோ அல்லது அந்த சிம் கார்டு செயலிழந்தாலோ, அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் வேலை செய்யாது.
மீண்டும், சரியான சிம் கார்டு போனில் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த செயலிகள் இயங்கும். அதே போல, வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிவுகள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாக லாக்-அவுட் ஆகும். மீண்டும் ’க்யூ ஆர்’ கோடு ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் மட்டுமே அவை இயங்கும்.
இதற்கான முழுமையான ஏற்பாடுகளைச் செய்ய, நிறுவனங்களுக்கு வருகின்ற டிசம்பர் 31, கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற ஜனவரி 1, முதல் இது முழுமையாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி எண்களைப் பயன்படுத்தி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் சைபர் மோசடிகள், டிஜிட்டல் அரஸ்ட் மற்றும் ஆள்மாறாட்ட குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
