வங்கதேச சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்!

-நமது சிறப்பு நிருபர்-

வங்கதேசத்தின் சிறைகளில் 15 நாடுகளைச் சேர்ந்த 407 வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், தங்க கடத்தல் மற்றும், சட்டவிரோத இணையதள வணிகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச நாளிதழான, ‘தி டெய்லி ஸ்டார்’ வெளியிட்டுள்ள செய்தியில், வங்கதேச சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்தம் 238 இந்திய கைதிகளில், 168 பேர் தங்கள் தண்டனை காலம் முடிந்த பின்னும், தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள் இன்னும் முழுமையடையாததால் தொடர்ந்து சிறையிலேயே உள்ளனர்.

வெளிநாட்டு கைதிகளின் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் 133 கைதிகளுடன் மியான்மர் உள்ளது. மேலும், ஆறு நைஜீரியர்கள், பாகிஸ்தான் மற்றும் மலேஷியாவை சேர்ந்த தலா மூன்று பேர் உள்ளனர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. கைதிகள் குறித்து இந்திய துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனை காலம் முடிந்து தாயகம் திரும்ப காத்திருக்கும் இந்தியர்களில், 25 பேர் மட்டுமே குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டவர்கள். தண்டனை காலத்தை முடித்தவர்கள் என, வங்கதேச வெளியுறவுத்துறை அளித்துள்ள பட்டியலில் உள்ள 121 இந்தியர்களில் பெரும்பாலானோரின் குடியுரிமையை உறுதிப்படுத்த போதிய ஆவணங்கள் இல்லை.

இவர்களை நேரில் சந்தித்து விபரங்களை சரி பார்க்க அனுமதி கோரியுள்ளோம். வங்கதேச வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பதில் வரும் வரை காத்திருக்கிறோம். சில வழக்குகளில் குடியுரிமை உறுதிப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link