டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் இருந்த நிலையில், அவர் அதிபர் மசூத் பெஷஸ்கியானிடம் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், மேற்காசிய நாடான ஈரானின் அப்போதைய உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாட்டின் புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அமெரிக்க தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார்போல் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளாததும் அவரது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் மொஜ்தபா கமேனிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; அவர் மிகவும் ஆரோக்கியமாகவும், தன் பணிகளைச் சிறப்பாகவும் செய்து வருகிறார். கடந்த வாரம் அதிபருடன் அவர் 7 மணி நேரம் நீண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
‘‘தன் தந்தையின் இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை என்பது பொய். பாதுகாப்பு காரணங்களால் அவர் மீடியாக்கள் முன் வரவில்லை என்றாலும், இறுதி ஊர்வலத்திலும் சில ரகசிய நேரங்களிலும் அவர் பங்கேற்றார், என தெரிவித்துள்ளார்.
