எழுதியவர்:Richa Sahay
குடும்பத் தகராறு காரணமாகப் பதியப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட வழக்கை தெரிவிக்காத காரணத்திற்காக, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் வீரரின் காவல் துறை பணிக்கான நியமனத்தை நிராகரிக்க முடியாது என்றும், அவரை தரம் II காவல் காவலர் அல்லது சிறை வார்டன் பணிக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் மதராஸ் உயர்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் இந்திய ராணுவத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று இணைந்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று 17 ஆண்டுகள் களங்கமற்ற சேவையை நிறைவு செய்து ஓய்வுபெற்றதாகத் தெரிவித்துள்ளார். இதன்பின்னர், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், தரம் II காவல் காவலர் பதவிக்காக அவர் விண்ணப்பித்தார். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சகிப்புத்தன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகளில் பங்கேற்றுத் தேர்ச்சி பெற்ற அவர், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக 2016ஆம் ஆண்டில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் முதற்கட்ட தகவல் அறிக்கை பதியப்பட்டது. ஆனால், விசாரணைக்குப் பிறகு அந்த வழக்கு தொடரப்படாமல் கைவிடப்பட்டு, அதற்கான அறிக்கை அதிகார வரம்பு கொண்ட நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், தம்பதியினர் குடும்ப நல நீதிமன்றம் மூலம் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது, தன் மீது ஏதேனும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளதா என்ற கேள்விக் கட்டத்தில் அவர் ‘இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாகக் கைவிடப்பட்டதாலும், விண்ணப்பிக்கும் நாளில் தன் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாததாலும், அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், காவல் துறை சரிபார்ப்பின் போது இந்த விவரங்கள் கண்டிப்பாகத் தெரியவரும் என்பதால், தகவலை மறைக்கும் எண்ணம் மனுதாரருக்கு இருக்கவில்லை என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்ட வழக்கை குறிப்பிடத் தேவையில்லை என்ற நன்னம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர் செயல்பட்டார் என்றும் தெரிவித்தார்.
அதேவேளையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், காவல் துறை சரிபார்ப்பிற்கு முன்னர் மனுதாரர் எந்தவொரு குற்றவியல் வழக்கிலும் ஈடுபடவில்லை என்பதை அதிகாரிகளுக்கு உறுதி செய்ய வேண்டும் என்றும், தகவலை மறைத்ததன் மூலம் அவர் சட்டத்தை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றும், விண்ணப்பதாரர்களின் உண்மையுள்ள தன்மையை அறிவதற்கே இத்தகைய தகவல்கள் கேட்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரஜனீஷ் பதையில், மனுதாரரின் மனைவி அளித்த புகாரின் பேரில் மட்டுமே வழக்கு பதியப்பட்டதாகவும், அது பின்னர் கைவிடப்பட்டு தம்பதியினர் பரஸ்பர விவாகரத்து பெற்றுவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார். மனுதாரர் விண்ணப்பித்த நாளில் அவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதையும், விண்ணப்பிப்பதற்கு குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, இந்தத் தகவலைத் தெரிவிக்காதது தகவலை மறைப்பதாகக் கருத முடியாது என்றும், குடும்பத் தகராறு காரணமாக எழுந்த இந்தச் சம்பவம் ஒரு சிறிய விஷயம் என்றும் உயர்நீதிமன்றம் கருதியது. மேலும், 17 ஆண்டுகள் களங்கமற்ற ராணுவச் சேவை ஆற்றிய மனுதாரர் கோரிய நிவாரணத்தைப் பெற தகுதியானவர் என்று தெரிவித்து, மற்ற அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவரைப் பணி நியமனத்திற்குப் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மனுவை அனுமதித்தது.
