-நமது நிருபர்-
திருப்பரங்குன்றத்தில், மாதா அமிர்தானந்தா மயி மடத்தில், ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் லிங்க வழிபாட்டை தொடங்கி வைத்த பின், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, நாளை கிரிவலத்தில், முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் கலந்து கொள்கின்றனர். தீபம் ஏற்ற, நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்க வேண்டும். வரும் நவ. 24ல், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை காண, பல லட்சம் மக்கள் வர வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததால், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலையை கடந்த தி.மு.க., ஆட்சி ஏற்படுத்தியது. அந்த நிலையை தற்போதைய அரசு உருவாக்காது என நம்புகிறோம்.
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறிய முதல்வர் விஜய், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, அறநிலையத்துறைக்கு உத்தரவிடுவார் என நம்புகிறோம்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், ஹிந்துக்களும் ஓட்டு போட்டுத்தான், நிர்மல்குமார் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளார். அவர், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வருங்காலங்களில், அவர் அரசியல் செய்வது சிரமமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
