திருச்சியில் கனமழை; சாலைகளில் தேங்கிய தண்ணீர்: இரவில் சீரமைப்பு பணிகளில் இறங்கிய மாநகராட்சி ஆணையர்

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதலே திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய மழையால் மாநகர சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. 

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் பேருந்து சிக்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். திருச்சியில் பால்பண்ணை, பாலக்கரை, தில்லை நகர், மேலப்புதூர், ஜங்ஷன் ரயில்வே பாலம், கரூர் பைபாஸ் மேம்பால பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பல இடங்களில் போலீசார் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சாலைகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஆணையர் பொன்மணி வெளியேற்ற களத்தில் இறங்கி பணியாளர்களை வேலை வாங்கினார். அரிஸ்டோ மேம்பாலத்தில் மழை நீர் வடியும் பகுதிகளில் தேங்கிய மண்ணை அகற்றவும், தண்ணீர் வெளியேறவும் மழை பெய்யும் தருவாயிலும் பணியில் இறங்கி துரித நடவடிக்கை எடுத்தார். மாலை பெய்த மழையில் தேங்கிய மழை நீரை இரவு 10 மணிக்குள் முற்றிலும் அகற்றி போக்குவரத்துக்கு இயல்பு நிலையை ஏற்படுத்தினார் மாநகராட்சி ஆணையர் பொன்மணி.

க.சண்முகவடிவேல்

Source link