கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத்துறை, கடந்த ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் அனுப்பியது. இருப்பினும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆதலால், அதிமுக எம்.பி தம்பிதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். இதையடுத்து, முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்தது. இதற்கிடையில், தன்னுடைய தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் முன்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது கே.என்.நேரு தரப்பில், தன் தரப்பு வாதங்களை கேட்காமல் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு முரணானது. தன் தரப்பு வாதங்களை முன்வைக்க உரிமை வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில், ‘அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் முந்தைய திமுக தலைமையிலான தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சராக இருந்த கே.என்.நேருவை பாதுகாப்பதில் திமுக மிகவும் உறுதியாக இருந்தது’ எனக் குற்றம் சாட்டியது.
கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறு தினம், அதாவது வரும் 26ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
