கரிக்கையூர் காட்டாற்று வெள்ளம் பாயும் மிகப்பெரிய பள்ளத்தாக்கு மற்றும் பவானிசாகர் அணைக்கட்டுக்கு செல்லும் நீர்வழித்தடங்களில் பழங்குடியின மக்கள் உதவியுடன் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த சேலூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் போஜன் (வயது 58). இவருக்கு மனைவி தேவி உள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று மரணம் அடைந்தார்.
வெள்ளத்தில் சிக்கினார்
தொடர்ந்து அன்னார் உடலை கொப்பையூர் சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக அங்குள்ள மக்கள் நேற்று இரவு 7 மணிக்கு எடுத்து சென்றனர். பின்னர் சுடுகாட்டில் உடல் அடக்கம் முடிந்து அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர்.
அந்த நேரத்தில் கரிக்கையூர் பகுதியில் கனமழை பெய்தது. இதன்காரணமாக அந்த ரோட்டில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. எனவே சேலூர்மட்டம் கிராமத்தினரை அழைத்து வந்த வாகன டிரைவர் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு மழை ஓய்வதற்காக காத்திருந்தார்.
தொழிலாளி கதி என்ன?
ஆனால் தொழிலாளி போஜன் மட்டும் நள்ளிரவு நேரத்தில் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்றார். அப்போது அவரை திடீரென வெள்ளம் இழுத்து சென்றது. அதிகாலை நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் இந்த சம்பவம் குறித்து சேலூர் மட்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
தீயணைப்பு படை
அதன்பிறகு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போஜனை தேடும் பணிகள் தொடங்கி விடிய விடிய நடைபெற்று வருகின்றன.
கரிக்கையூர் காட்டாற்று வெள்ளம் பாயும் மிகப்பெரிய பள்ளத்தாக்கு மற்றும் பவானிசாகர் அணைக்கட்டுக்கு செல்லும் நீர்வழித்தடங்களில் பழங்குடியின மக்கள் உதவியுடன் தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
