சாலையின் முக்கிய இடங்களில் சாலை இரண்டாக பிளந்துள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் இளரவசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன
கனமழை காரணமாக கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சுங்கச்சாவடி அருகே செண்பகனூர் பஸ் நிறுத்த பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது
இதனால் அங்கு உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிரதான சாலையில் சுற்றுலா வாகனங்களும், பொது மக்களின் வாகனங்களும் சுமார் 2 மணி நேரம் வரை அணிவகுத்து நின்றன. அதன்பிறகு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் டம்டம்பாறை அருகே உள்ள எலிவால் அருவி என்று அழைக்கப்படும் தலையாறு அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு வியந்தனர்.
பாதை துண்டிப்பு
கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான மாற்றுச் சாலையாக அடுக்கம் வழியாக சாலை அமைக்கப்பட்டது. பலமுறை இந்த சாலை பணிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்தும் ஒவ்வொரு மழையின்போதும் மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து அரசு பணம் வீணடிக்கப்பட்டு முறையாக சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கன மழையால் இந்த சாலைகளின் பல இடங்களில் சேதம் அடைந்தது. பல இடங்களில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுந்தது போன்ற சம்பவங்களால் சாலையே இரண்டாக துண்டிக்கப்பட்டது.
கிராம மக்கள்
சாலையின் முக்கிய இடங்களில் சாலை இரண்டாக பிளந்துள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தசாலையில் எந்த வாகனங்களோ, நடந்து செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு என மிக மோசமான நிலைமைக்கு அடுக்கம் பகுதி சென்றுள்ளதால் கிராம மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் இந்த சாலைகள் துண்டிப்பு என்பது இப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது.
இதன் காரணமாக பெரியகுளத்துக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராதபடி போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
கோரிக்கை
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த குழுவினர் பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை நீடித்து வரும் நிலையில் குறைவான அலுவலர்களே இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொடைக்கானலின் பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள், போதிய வடிகால் வசதி இல்லாதது போன்றவற்றால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ெதாடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
