தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிகளுக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (24-10-26) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ், விராலிமலை தொகுதிக்கு செல்லபாண்டி, கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பெருந்துறை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திமுக சார்பில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், முத்துசாமி, ஆவுடையப்பன், செந்தில் பாலாகி, செல்லபாண்டி ஆகியோரிடம் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும், தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 5 தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்த நிலையில், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
