சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 225வது நினைவுத் தினம் இன்று (24-10-26) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கல் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல்குமார், பிரபு, முகமது பர்வேஸ் உள்ளிட்டோர் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இடைத்தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. திமுகவும் அதிமுகவும் எப்போது சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்தததால் இடைத்தேர்தல் வந்தது. திமுகவும், அதிமுகவும் செய்த தவறால் வந்த இடைத்தேர்தல். அடுத்து வரும் தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ.க மூன்று பேரும் தான் தமிழக முதல்வருக்கு எதிராக அணி திரள்வார்கள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இவர்கள் இதே மாதிரி சேர்ந்து செய்தால் இன்னும் பல தேர்தல்கள் வரும்.
முதல் மாநாட்டில் முதல்வர் விஜய் கொள்கை எதிரி என்று பா.ஜ.கவை அறிவித்துவிட்டார். இதில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் துளி அளவும் சமரசம் செய்ய மாட்டார். எடுத்து வைத்த கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய கொள்கையில் எந்த சமரசமும் செய்யமாட்டார். தமிழக மக்களுடைய நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடக்கும். முதல்வர் விஜய் பதவியேற்கும் போதே வெளிப்படைத்தன்மையாக இருப்போம் என்று சொல்லிவிட்டார். முகத்தில் கர்சீப் மூடிவிட்டு யாரையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் வெளிப்படையாக சந்திப்பு இருக்கும்” என்று கூறினார்.
