சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளை திமுக அலுவலகத்தில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். முதன்மை செயலாளர் கேஎன் நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையின் போது உடனிருந்தனர்.
ஆலோசனை குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது;
ஆலோசனையில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து பேசப்பட்டது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் தயாராக இருக்க வேண்டும். எனவே தொகுதிகளில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விடுங்கள்.
தொகுதியில் மக்ளிடம் நன்கு அறிமுகமான நபர்களை கொண்ட பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
