சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் புராணக் கதைகள், நிகழ் கால காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பின்பு இம்மாதம் கடந்த 21ஆம் தேதி ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் வெளியானது. இதிலும் புராணக் கதைகள் இடம் பெறக் கூடுதலாக போர் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவுக்கு 60 அடி உயரமுள்ள கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் ஒரு நடிகைக்கு வைக்கப்பட்டுள்ள உயரமான கட்டவுட் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக நடிகர்களுக்கு கட்டவுட் வைக்கும் பழக்கம் நீடித்து வரும் நிலையில் ஒரு நடிகைக்கு வைத்துள்ள இந்த கட்டவுட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
