கொட்டித் தீர்க்கும் கனமழை : அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள்!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் நேற்று (24.10.2026) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. 

அதன் ஒரு பகுதியாக கொட்டக்கம்பை பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் ஓரத்தில் இருந்த வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக வீடு அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளையும் வீடுகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரக் கண்காணிப்புப் பணியிலும் சீரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கனமழையின் காரணமாக தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் சுமார் 100 அடி நீளமும் 30 அடி உயரமும் கொண்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது இதில், இரண்டு கார்கள் சிக்கி பலத்த சேதமடைந்தன. 

அதோடு ஆறு இருசக்கர வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கின. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தபோது, அங்கு பணியில் இருந்த காவலாளி இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு, அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.