தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்யும் என வானிலை அறிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோபிசெட்டிபாளையம் அருகே கடத்தூரில் பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதன் பின்னர் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று கொண்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு மழை கூடுதலாகப் பெய்யக்கூடும் என்ற கணிப்பின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் விஜய் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு வார காலமாக அனைத்துத் துறைகளையும் அழைத்து, துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த 15 ஆண்டுகால பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு, மண்டல வாரியாகப் பிரித்து, மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாகப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஏழு அமைச்சர்களுக்கு நேரடிப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாகப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, ஊட்டி பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள இடங்களில், மண்ணையும் பாறைகளையும் அப்புறப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அங்கு மழைப்பொழிவு மிகக் கூடுதலாக உள்ளது; சுமார் 25 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, பவானிசாகர் அணைக்கு 55,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை கூடுதலாகப் பெய்யும் என்ற வானிலை விவரங்கள் வந்துள்ளதால், அதற்கேற்பப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தருவது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில், தலைமைக்கழகத்தின் மூலமாகவும், முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலமாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் விவரங்கள் அறிவிக்கப்படும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படும். பல பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் ஆற்றில் வரக்கூடிய கழிவுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குழாய்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது விரைவு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை இன்று அல்லது நாளைக்குள் நிறைவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
