-நமது நிருபர்-
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை 2026-27 கல்வியாண்டு முதல் ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களிடமிருந்து வினாத்தாள் அல்லது பிற சட்டவிரோத கட்டணங்களை வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் கட்டணம் அல்லது பிற சட்டவிரோத கட்டணங்களை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது.
