இட்லி கடைக்காரர் வீட்டில் துப்பாக்கி பறிமுதல் சீர்காழியில் தம்பதி உள்ளிட்ட 3 பேர் கைது

மயிலாடுதுறை: சீர்காழியில் இட்லி கடைக்காரர் வீட்டில் இருந்து பிஸ்டல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் இன்று (அக்.,24) மாலை இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமைதான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகப்படும்படி வந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் நான்கு உலோக சிலைகள், பூஜை மணி, கத்தி, குளோரோபாம் இருந்தது.

விசாரணையில் அவர்கள் சீர்காழி அறியாபிள்ளை குளத்து மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ், 45; அவர் மனைவி ரோஷினி, 35; விளந்திட சமுத்திரம் அஷ்ரப்அலி மகன் அப்துல் ஹாதி, 25; என்பதும், சுரேஷ் அவரது மனைவி இருவரும் அங்குள்ள குளக்கரையில் தள்ளு வண்டியில் இட்லி கடை வைத்திருப்பதும், ஓய்வு நேரங்களில் சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் வாடகை வீடு எடுத்து குறி சொல்லும் தொழில் செய்து வந்ததுள்ளனர்.

சுரேஷ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், 9 எம்.எம். பிஸ்டல் துப்பாக்கி, 6 தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

மேலும் ,சிலைகள் எங்கிருந்து வந்தன, சாதாரண இட்லி கடைக்காரர் வீட்டில் பிஸ்டல் துப்பாக்கி வந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எஸ்.பி., சினேகா பிரியா, கைது செய்யப்பட்ட மூவரிடம் விசாரணை நடத்தினார். இட்லி கடைக்காரர் வீட்டில் நவீன பிஸ்டல் துப்பாக்கி இருந்த சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link