ஐதராபாத் பசங்க நாங்க ரொம்ப நல்ல பசங்க தாங்க… திலக் வர்மா–நிதிஷ் குமாரை கொண்டாடுங்க

கிறைஸ்ட்சர்ச்: இந்திய அணியின் சிறந்த ‘சேஸ் மாஸ்டராக’ உருவெடுத்துள்ளார் திலக் வர்மா. இக்கட்டான நிலையில் களமிறங்கி, அணியை கரை சேர்க்கிறார். இவருக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ‘கம்பெனி’ கொடுக்கிறார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2–0 என முன்னிலையில் உள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று முன் தினம் நடந்த பரபரப்பான இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 181 ரன்னை விரட்டிய, இந்திய அணி, 10.5 ஓவரில் 70/5 ரன் எடுத்து தவித்தது. இந்த சமயத்தில் நமன் திர் (31) கைகொடுத்தார். 7வது விக்கெட்டுக்கு திலக் வர்மா (51*ரன்), நிதிஷ் குமார் ரெட்டி (13 பந்தில் 26* ரன்) சேர்ந்து 30 பந்தில் 69 ரன் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். 23 வயது இளம் வீரர்களான இருவரும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல புரிதல் இருந்தது.

திலக் வர்மாவை பொறுத்தவரை 26 பந்தில் 51 ரன் விளாசி, மீண்டும் ஒரு முறை ‘சேஸ்’ செய்த போட்டியில் கச்சிதமாக ‘பினிஷிங்’ செய்தார். இதற்கு முன், 2025ல் சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 166 ரன்னை விரட்டிய இந்திய அணி 9.1 ஓவரில் 78/5 ரன் எடுத்து திணறியது. அப்போது தனிநபராக போராடிய திலக் வர்மா, 55 பந்தில் 72 ரன் விளாசி, வெற்றி தேடித் தந்தார். 2025ல் ஆசிய கோப்பை பைனலில் (எதிர், பாக்.,), 147 ரன்னை ‘சேஸ்’ செய்த இந்தியா, 4 ஓவரில் 20/3 ரன் எடுத்து தத்தளித்தது. இந்த சமயத்தில் திலக் வர்மா, 53 பந்தில் 69 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

திலக் வர்மா கூறுகையில்,‘‘கிறைஸ்ட்சர்ச் ஆடுகளத்தில் சிக்சர் அடிப்பது கடினமாக இருந்தது. நானும் நிதிஷ் குமாரும் சேர்ந்து ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தோம். வாய்ப்பு கிடைத்த போது துணிச்சலாக விளாசினோம். கடைசி வரை நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தேன். ஐதராபாத்தில் விளையாடிய சமயத்தில், தெலுங்கு வீரர்களான நாங்கள் சேர்ந்து ஒரு போட்டியில் வெற்றி தேடித் தந்தால் எவ்வளவு ‘ஸ்பெஷலாக’ இருக்கும் என நினைத்துள்ளோம். இதற்கான சரியான நேரத்தை கடவுள் கொடுப்பார் என காத்திருந்தோம். தொடர்ந்து கடினமாக முயற்சித்தோம். சரியான நேரத்தில் சரியான விஷயம் நடந்துள்ளது. கடவுள் திட்டப்படி எல்லாம் சாதகமாக முடிந்தது,’’என்றார்.

நிதிஷ் குமார் கூறுகையில்,‘‘நமன் திர் அதிரடியாக ஆடிய போது, திலக் வர்மா அடக்கி வாசித்தார். நமன் அவுட்டான பிறகு நானும் திலக் வர்மாவும் விவேகமாக விளையாடி நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றியை வசப்படுத்தினோம்,’’என்றார்.

‘ஸ்பெஷல்’ பிரியாணி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறுகையில்,‘‘இரு ஐதராபாத் பசங்க (திலக், நிதிஷ்) சேர்ந்து, நியூசிலாந்து பவுலர்களை சிதறடித்து, சிறப்பான ‘பிரியாணி’ தயார் செய்தனர். பெரிய மைதானம் என்பதை உணர்ந்து அடிக்கடி சிக்சர் விளாச முயற்சிக்கவில்லை. புதுமையான ‘ஷாட்’ அடித்து அசத்தினர். திலக் வர்மா அழகாக ஒன்று, இரண்டு ரன்னாக சேர்த்தார். ‘பினிஷர்’ என்ற முறையில் கடைசி கட்ட நெருக்கடியை திறம்பட சமாளித்தார்,’’என்றார்.

Source link