சென்னை: ‘வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘அர்னாப்’ புயல் இன்று உருவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் நெடுங்குணத்தில் 18; கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 17; கள்ளக்குறிச்சி முடியனுார், விழுப்புரம் நொளம்பை, தர்மபுரி மாவட்டம் பிக்கிலி பகுதிகளில் தலா 16; தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பெரம்பலுார் தழுதமலை, நுாத்தப்பூர் பகுதிகளில் தலா 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கரையை கடக்கும்
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. பின்னர், மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 5 கி.மீ.,யாக குறைந்தது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ‘அர்னாப்’ புயலாக இன்று மாறலாம். நாளை தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிஷா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
16 மாவட்டங்களில்…
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
