திருமண முறிவு என்ற கடினமான காலகட்டத்தில் பெற்றோரின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஊடகவியலாளர் நயன்தீப் ரக்ஷித்துடனான நேர்காணலில் பேசிய சௌந்தர்யா, “எனது முதல் திருமணம் முறிந்தபோது, அந்த மிகக் கடினமான தருணங்களில் எனது பெற்றோர் எனக்கு ஒரு பெரும் பாறையைப் போல உறுதியான ஆதரவாக நின்றார்கள். அவர்கள் இல்லையென்றால் என்னால் அதிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முதல் ஆண் அவளுடைய தந்தை; அவளது முதல் தோழி அவளுடைய தாய். ஒரு பெண் வளர வளர இந்த பிணைப்பு மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே செல்கிறது” என்று பகிர்ந்துகொண்டார்.
பெற்றோரின் ஆதரவு ஏன் முக்கியமானது?
விவாகரத்து போன்ற கடினமான தருணங்களில், மனிதர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அவர்களின் பக்கபலமாக உறுதியோடு நிற்கும் பெற்றோர் தான் என்று ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையின் ‘எம்பவர்’ அமைப்பைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர் க்ருதி ஷா தெரிவிக்கிறார். வாழ்க்கையில் எல்லாமே சரியாக இருக்கும்போது மட்டுமல்ல, தங்களை பெற்றோர் உண்மையாக புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை உணரும்போதே பிள்ளைகள் சூழ்நிலைகளை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் பேசுவதற்குத் திறந்த மனதுடன் வழிவகுக்கும்போதும், அவர்களின் பயங்களைப் புரிந்துகொண்டு உணர்வுப்பூர்வமாக உடனிருக்கும்போதும், அது பிள்ளைகளுக்கு ஏற்படும் கூச்சத்தையும் குழப்பத்தையும் குறைக்கிறது. மேலும், பெற்றோர் தங்களின் சொந்த மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, அன்றாட வழக்கமான நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவது மற்றும் சமூகத் தயக்கங்களை மெதுவாக எதிர்கொள்வது போன்றவை பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு நிலையான அமைதியைத் தரும். ஒருவேளை மன அழுத்தம் மிக அதிகமாக உணரும் பட்சத்தில், சரியான நேரத்தில் வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவது இத்தகைய மாற்றங்களைத் தனியாக எதிர்கொள்ளாமல் இருக்க உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
சமூகக் பார்வையும் தற்போதைய மாற்றமும்
சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவ உளவியலாளர் மெஹசாபின் தோர்டி இது குறித்துப் பேசுகையில், உலகிலேயே மிகக் குறைந்த விவாகரத்து விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதே, இங்கு விவாகரத்து இன்னும் ஒரு விலக்கப்பட்ட விஷயமாக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்கிறார். சமூகத்தின் விமர்சனப் பார்வைகளுக்குப் பயந்து, பலர் தங்களின் உணர்வுப்பூர்வமான மற்றும் உடல் ரீதியான நலனைப் பணயம் வைத்து, மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, விவாகரத்தின் போது பெண்கள் சமூகத்தின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். ஒரு மனைவியாகவும் தாயாகவும் அவர்களின் செயல்பாடுகள் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆண்களும் விமர்சிக்கப்பட்டாலும், அவர்கள் மீதான கண்காணிப்பு குறைவாகவே உள்ளது. குடும்பத்தையும் வீட்டையும் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களுடையது என்ற பாரம்பரிய பாலினக் கருத்துகளே இந்த வேறுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்று தோர்டி சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும், இந்த சமூகக் பார்வையில் பல ஆண்டுகளாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். இந்த முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது. விவாகரத்து பற்றிய பொது விவாதங்கள் அதிகரிப்பதன் மூலமும், விவாகரத்து விகிதங்கள் உயர்ந்து வருவதன் மூலமும் மக்கள் விவாகரத்து என்ற கருத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அதே வேளையில், பல பண்பாடுகளிலும் சமூகங்களிலும் இது தொடர்பான தவறான எண்ணங்களும் பாரம்பரியக் கருத்துகளும் இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
