பிரதமர் மோடியின் தந்தை குறித்து தரம் தாழ்ந்த பேச்சு : கார்கேவை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்

– நமது டில்லி நிருபர் –

பீஹாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் கார்கே, ” பிரதமர் மோடி அரசை வெளியேற்றுவோம். மோடியை மட்டுமல்லாமல், அவருடைய அப்பாவாக இருந்தாலும் வெளியேற்றுவோம்,” என்று தரக்குறைவாக விமர்சித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில்,”கார்கே பேச்சு வருத்தம் அளிக்கிறது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கருத்தை சாதாரண தொண்டரோ அல்லது இளம் தலைவரோ சொல்லவில்லை. மாறாக நாட்டிலேயே பழமையான கட்சியின் தலைவர் என சொல்பவர் கூறியுள்ளார். அத்துடன் காங்கிரஸ் நிற்கவில்லை. கார்கேயின் வார்த்தையை நியாயப்படுத்தி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காமல், அதனை நியாயப்படுத்துகிறது,” என்றார்.

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: காங்கிரசில் உள்ளவர்கள் அனைவரும் முதிர்ச்சியற்றவர்களாக உள்ளனர். விரக்தி அடைந்தும்,ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். நாட்டின் கலாசாரத்தை சீரழிக்கிறார்கள். எந்தவொரு தலைவரின் அல்லது பொது வாழ்வில் இல்லாத எந்தவொரு நபரின் மறைந்த பெற்றோரின் பெயர்களை குறிப்பிடுவது, ராகுலின் சகவாசத்தால் ஏற்பட்ட விரக்தியையும் அதன் தாக்கத்தையும் காட்டுகிறது எனக்கூறினார்.

அதேநேரத்தில் சோனியாவையும், கார்கேவையும் கடந்த காலங்களில் மோடியும், அமித்ஷாவும் மோசமாக விமர்சித்தனர் என காங்கிரஸ் பதிலளித்தது.

கார்கேயை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுதும் கட்சியின் தலைநகரங்களில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்தியது. பீஹாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கார்கேயின் உருவபொம்மையை பாஜவினர் எரித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கார்கேயின் போஸ்டர்களை எரித்த பாஜவினர், கோஷம் எழுப்பினர். பெங்களூருவில் சுதந்திர பூங்காவில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link