இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சீனா, துபாய் போன்ற பல நாடுகளில் மனித வடிவிலான ரோபோக்கள் பல வேலைகளை செய்து வருகிறது. அரசாங்க துறைகளிலும் ரோபோக்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சோப் கூட கிடைக்கல: பார்ப்பதற்கு தான் சொர்க்கம்; உள்ளே நரகம்… காதல் நகரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா?
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ‘யூனிட்ரீ ரோபோடிக்ஸ்’ (Unitree Robotics) தயாரித்துள்ள ஹெச்2- எக்ஸ் ‘H2-X’ என்ற மனித உருவ ரோபோ மேடையில் குங்ஃபு சாகசம் செய்ய முயன்ற போது கால் உடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜூ நகரில் அக்டோபர் 22 அன்று நடைபெற்ற “2026 உலக பிசிகல் ஏ.ஐ மாநாடு மற்றும் யூனிட்ரீ பார்ட்னர் எக்கோசிஸ்டம் உச்சிமாநாட்டில்” இந்த விபத்து நிகழ்ந்தது.
குங்ஃபு சாகசத்தில் சொதப்பிய ரோபோ
மேடையில் குங்ஃபு சாகசங்களின் ஒரு பகுதியாக ‘சைடு ஃபிளிப்’ அதாவது பக்கவாட்டில் தலைகீழாக கரணம் அடிக்க முயன்ற போது, ஹெச்2- எக்ஸ் ரோபோ தடுமாறி கீழே விழுந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அதன் காலின் ஒரு பகுதி உடலின் பிரதான பாகத்திலிருந்து தனியாக கழன்று விழுந்தது.
சமூக வலைதளங்களில் கிளம்பிய விவாதம்
இந்த வீடியோ சீன சமூக வலைதளமான சீனா வைபோவில் வைரலானதைத் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது இன்னும் வணிகரீதியாக முழுமையாக உற்பத்தி செய்யப்படாத மாதிரி என்றாலும், இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில் நுட்பம் வளரும் போது இதுபோன்ற தவறுகள் இயல்புதான் என்றும், ஒரே ஒரு சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தையும் நிராகரித்துவிடக் கூடாது என்றும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரோபோவின் இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், எந்திர வடிவமைப்பு மற்றும் அதன் பாகங்களின் வலிமையை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹெச்2- எக்ஸ் ரோபோவின் சிறப்பம்சங்கள்
அக்டோபர் 21 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹெச்2- எக்ஸ் ரோபோ, கார்களின் கதவுகளை உதைத்து உடைப்பது, காரின் முன் பகுதியை தூக்குவது மற்றும் 4 மீட்டர் உயர மேடையில் இருந்து குதித்து தலைகீழாக சுழல்வது போன்ற அதிரடி சாகசங்களைச் செய்யும் திறன் கொண்டது. பாதுகாப்புப் பணிகள் மற்றும் அவசரக்கால மீட்புப் பணிகளுக்காகவே இந்த ரோபோ பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Unitree’s newly unveiled H2-X humanoid robot took a tumble during a kung fu demo, losing part of a leg after a failed side flip. The mishap happened at the company’s Oct 22 event, just a day after the robot’s launch. https://t.co/oCLUSkr78L
— Shanghai Daily (@shanghaidaily) October 23, 2026
நிகழ்ச்சியில் பேசிய யூனிட்ரீ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான வாங் சிங்சிங், செயற்கை நுண்ணறிவு அடுத்த 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய திருப்புமுனையைச் சந்திக்கும் என்றும் ரோபோக்கள் தங்களைத்தானே சுயகற்றல் மூலம் மேம்படுத்திக் கொள்ளும் ஏ.ஐ அமைப்பை தங்கள் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய ரோபோ விபத்துகள்
பொது நிகழ்ச்சிகளில் ரோபோக்கள் சொதப்புவது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் ஷென்ஜென் நகரில் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனமாடிய ஒரு மனித உருவ ரோபோ, மேடையில் தடுமாறி கீழே விழுந்ததால் உதவியாளர்களால் இழுத்துச் செல்லப்பட்டது. இதேபோன்று ஷின்ஜியாங்கில் நடந்த விளையாட்டு விழாவில் குங்ஃபு உதை விட முயன்ற ரோபோ ஒன்று நிலைதடுமாறி கீழே விழுந்தது. ஷான்சி மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கை கால்களை வேகமாகச் சுழற்றி ஆடிய யூனிட்ரீ ரோபோ ஒன்று, பார்வையாளராக நின்றுகொண்டிருந்த சிறுவனின் முகத்தில் தெரியாமல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
