அமெரிக்க சந்தையில் ஆர்டர்கள் குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை துறையின் வருவாய் வளர்ச்சி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, சி.எம்.ஐ.இ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க ஆர்டர்கள் சரிவு
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனைக்கான ஆயத்த ஆடை ஆர்டர்கள், 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம், சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக, அந்நாட்டு வாடிக்கையாளர்கள் புதிய ஆர்டர்கள் வழங்குவதில் எச்சரிக்கையாக உள்ளனர்.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரித்துள்ளபோதிலும், செங்கடல் வழித்தட சிக்கலால் சரக்கு போக்குவரத்து செலவு இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
கப்பல்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுவதால் பயண நேரமும் அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டு இறுதி விற்பனைக்கான ஆடைகளை ஏற்றுமதியாளர்கள் முன்கூட்டியே அனுப்பியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 22.90 சதவீதம் அதிகரித்து, 10,820 கோடி ரூபாயாக இருந்தது. இந்த முன்கூட்டிய ஏற்றுமதி, டிசம்பர் காலாண்டின் வளர்ச்சியை குறைக்கக்கூடும்.
உற்பத்தி செலவு உயர்வு
பருத்தி, செயற்கை இழை துணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளதால், ஆயத்த ஆடை நிறுவனங்களின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்க சில நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜூன் காலாண்டு வரை தனது தயாரிப்புகளின் விலையை 4 முதல் 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.செப்டம்பர் காலாண்டில் ஆயத்த ஆடைகளின் மொத்த விலைக் குறியீடு, முந்தைய ஆண்டைவிட 3.40 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், உள்நாட்டில் பண்டிகைக்கால ஆடை விற்பனை சீராக இருப்பதும், விற்பனை விலை உயர்வும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு ஓரளவு ஆதரவாக இருக்கும்.
ஏற்றுமதி நிலவரம்
ஜூன் காலாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 3.10 சதவீதம் குறைந்திருந்தது. செப்டம்பர் காலாண்டில் ஏற்றுமதி 10.90 சதவீதம் அதிகரித்தது.
எனினும், அமெரிக்க ஆர்டர்கள் சரிவு, அதிக போக்குவரத்து செலவு மற்றும் முன்கூட்டிய ஏற்றுமதி காரணமாக டிசம்பர் காலாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி மந்தமடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயத்த ஆடை துறை வருவாய் வளர்ச்சி
காலாண்டு : வளர்ச்சி
மார்ச் 2026 : 4.60%
ஜூன் 2026 : 7.50%
செப்டம்பர் 2026 (மதிப்பீடு) : 9.00%–10.00%
டிசம்பர் 2026 (கணிப்பு) : 7.00%
ஆயத்த ஆடை ஏற்றுமதி நிலவரம்
காலம் : ஏற்றுமதி மதிப்பு : வளர்ச்சி
ஜூன் 2026 காலாண்டு : ரூ.34,770 கோடி : –3.10% (சரிவு)
செப்டம்பர் 2026 காலாண்டு : ரூ.34,530 கோடி : +10.90% (ஏற்றம்)
செப்டம்பர் 2026 மாதம் : ரூ.10,820 கோடி : + 22.90 (ஏற்றம்)
துணி வகைகளின் விலை உயர்வு ஏப்ரல் – செப்டம்பர் 2026
துணி வகை : விலை உயர்வு
பருத்தி நெய்த, பின்னப்பட்ட ஜவுளிகள் : 5.80%
பருத்தி – பாலியஸ்டர் கலவை துணிகள் : 7.80%
சாயமிட்ட, அச்சிட்ட பருத்தி துணிகள் : 5.40%
செயற்கை இழை நெய்த ஜவுளி : 2.10%
