இடியாய் இறங்கிய 8 வயது மகள் மரணம்; உடைந்த போன சித்ரா: இசை உலகிற்கு லதாவும், இளையராஜாவும் மீண்டும் அழைத்து வந்தது எப்படி?

பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா, தனது மகள் நந்தனாவை இழந்த துயரத்திலிருந்து இன்றுவரை முழுமையாக மீளவில்லை என்று தெரிவித்துள்ளார். மகளின் மறைவுக்குப் பிறகு பாடுவதையே நிறுத்தியிருந்த அவர், மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்குவதற்கு பாடகர் லதா மங்கேஷ்கரும் இசையமைப்பாளர் இளையராஜாவும் முக்கியப் பங்காற்றினர். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இழப்பையும், அந்தத் துயரத்தைக் கடந்து வாழ்வதற்கு இசை எவ்வாறு உதவியது என்பதையும் சித்ரா பகிர்ந்துள்ளார்.

தனது குரலாலும் பாடல்களாலும் பலரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் கே.எஸ். சித்ரா. பலரது கடினமான காலங்களிலும் அவரது பாடல்கள் ஆறுதலாக இருந்துள்ளன. ஆனால், தனது மகளை இழந்தபோது ஏற்பட்ட துயரத்திலிருந்து அவரால் எளிதில் மீள முடியவில்லை. சித்ராவுக்கும் அவரது கணவர் விஜய் சங்கருக்கும், திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு 2002-ல் மகளாக நந்தனா பிறந்தார். ஆனால், எட்டு ஆண்டுகள் மட்டுமே மகளுடன் வாழ்ந்த நிலையில், எதிர்பாராத விபத்தில் அவரை இழந்தனர்.

இசையுடன் அடையாளப்படுத்தப்படும் சித்ரா, மகளின் மறைவுக்குப் பிறகு கடுமையான மனவேதனைக்கு ஆளானார். இதனால், நீண்ட காலம் பொதுவெளியில் தோன்றுவதையும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்தார். அப்போது, ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், ‘மலையாளத்தின் நைட்டிங்கேல்’ என்று போற்றப்படும் சித்ரா மீண்டும் பொதுவெளிக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இருப்பினும், சித்ராவால் உடனடியாகப் பாடத் தொடங்க முடியவில்லை. பின்னர், இசையமைப்பாளர் இளையராஜா அவரை மீண்டும் இசை உலகுக்குக் கொண்டுவந்தார்.

சித்ராவை மீண்டும் இசை உலகுக்கு அழைத்த லதா மங்கேஷ்கர்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் யூடியூபருமான ரஞ்சினி ஹரிதாஸ், விஜய் டிவியின் ரவூஃபா உள்ளிட்டோர் தன்னை மீண்டும் இசை நிகழ்ச்சிகளுக்குத் திரும்ப அழைத்து வருவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டதாக சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்யா வர்மாவுக்கு அளித்த நேர்காணலில் சித்ரா கூறியதாவது:

“நான் மீண்டும் வர வேண்டும் என்பதற்காக ரஞ்சினி ஹரிதாஸ், விஜய் டிவியின் ரவூஃபா உள்ளிட்டோர் நிறைய முயற்சிகளை மேற்கொண்டனர். நான் திரும்பி வந்த பிறகுதான் என்னுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்குவோம் என்று அவர்கள் கூறினார்கள். ஆசியாநெட் தொலைக்காட்சி நிறுவனம், ஒவ்வொரு மாதமும் ரஞ்சினியை என்னிடம் அனுப்பி, மீண்டும் வருமாறு வலியுறுத்தியது. அப்போது எனக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணமே இல்லை.

அந்தச் சமயத்தில்தான் லதா மங்கேஷ்கரின் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். அந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அங்கு செல்லும் அளவுக்கு என் மனநிலை இல்லை. அப்போது லதா மங்கேஷ்கர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். நானும் அங்கு வருகிறேன்’ என்று கூறினார். ஆனாலும், அந்த நேரத்தில்கூட நான் பாடவில்லை.

நீண்ட காலம் நான் பாடவே இல்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் பாடினேன். சென்னையில் நடைபெற்ற இளையராஜா சாரின் இசை நிகழ்ச்சி எனது மறுபிரவேசத்துக்குக் காரணமாக அமைந்தது. நந்தனா இறந்த பிறகு, நான் மீண்டும் பதிவுப் பணிகளுக்குச் செல்லத் தொடங்கும் வரை, எனது சகோதரி பீனாவும் கொழுந்தியாள் ராஜியும் மூன்று முதல் நான்கு மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தனர்” என்றார்.

சித்ரா வராவிட்டால் நிகழ்ச்சியை ரத்து செய்வேன் என்ற இளையராஜா

மகளின் மறைவுக்குப் பிறகு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்று கூறியபோதும், இளையராஜா தன்னை மீண்டும் அழைத்ததாக சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இளையராஜா சார் என்னை ஒத்திகைக்கு வருமாறு அழைத்தார். என்னால் வர முடியாது என்றும், குறைந்தது ஓராண்டுக்காவது வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் வராவிட்டால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடுவதாக அவர் கூறினார். என்னை வரவழைப்பதற்காக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிக் கூறியது உண்மை.

அப்போது அவரது மனைவி ஜீவா மறைந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. எனது மகள் நந்தனா இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. ‘என்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவர் இப்போது இல்லை. இருந்தாலும், நான் நிகழ்ச்சிக்கு வரவில்லையா? நீங்களும் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்’ என்று அவர் கூறினார்” என சித்ரா நினைவுகூர்ந்தார்.

மகள் நந்தனாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட துயரத்தையும், அதிலிருந்து மீண்டு வாழ்க்கையைத் தொடர இசை எவ்வாறு உதவியது என்பதையும் சித்ரா 2021-ல் ‘ஆனமனோரமா’ (Onmanorama) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.

“அந்தத் துயரத்திலிருந்து நான் மீண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உண்மையில், அந்த நினைவுகளிலிருந்து நான் தொடர்ந்து விலகிச் செல்ல முயற்சி செய்கிறேன். அவை இன்றும் என்னைத் துரத்துகின்றன. ஆனால், எனது வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் அவற்றைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். அந்தத் துயரத்திலிருந்து ஒருபோதும் முழுமையாக விடுபட முடியாது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை அந்தத் துயரம் என்னைவிட்டு நீங்காது. என்னால் செய்ய முடிவது, அந்த நினைவுகளைச் சற்று ஒதுக்கி வைப்பதுதான்” என்றார்.

மகளின் இழப்பை எப்படிக் கடந்து வருகிறார் சித்ரா?

தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், கடினமான காலங்களில் வாழ்க்கையைத் தொடர முடிந்ததற்கும் பலரது பிரார்த்தனைகளே காரணம் என்று நம்புவதாகச் சித்ரா தெரிவித்தார்.

“நிறைய பேருடைய பிரார்த்தனைகள் எனக்குத் துணையாக இருப்பதாக நம்புகிறேன். அந்தப் பிரார்த்தனைகளின் அருளால்தான் அந்தத் துயரத்துக்குப் பிறகும் எனக்குப் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன என்றும், என்னால் மீண்டும் பாட முடிந்தது என்றும் நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு நிகழ்ச்சிகளோ, பாடல் பதிவுப் பணிகளோ கிடைக்காமல் இருந்திருந்தால், நான் எப்படி உயிர் பிழைத்திருப்பேன் என்று நினைத்தாலே நடுங்குகிறது. அந்தக் கடினமான காலங்களிலும்கூட இறைவன் எனக்கு நிறைய அருளியுள்ளார். அதற்காக நான் எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றார்.

தன்னைப் போலவே குழந்தைகளை இழந்த பல தாய்மார்கள் தங்களது துயரங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் சித்ரா கூறினார்.

“அதே துயரத்தை அனுபவிக்கும் பல தாய்மார்கள் என்னிடம் தங்களது கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த வலியிலிருந்து நான் எப்படி மீண்டு வந்தேன் என்று அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால், நான் அதிலிருந்து மீளவில்லை. ஏதாவது ஒரு வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு எல்லாவற்றையும் மறக்க முயற்சி செய்கிறேன். இதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு நிமிடம்கூட தனியாக அமர்ந்திருந்தால் என் மனம் வலியால் நிறைந்துவிடும்; கண்களில் கண்ணீர் வந்துவிடும். எனது மகளின் மறைவு ஏற்படுத்திய துயரத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்று சித்ரா தெரிவித்தார்.

2011-ல் வெளியான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) செய்தியின்படி, சித்ராவின் எட்டு வயது மகள் நந்தனா, 2011 ஏப்ரல் 14 அன்று துபாயில் உள்ள ஒரு வில்லாவில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஷார்ஜாவில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சித்ரா துபாய் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. நந்தனா சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

Source link