பள்ளி மாணவன் அகிலன் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் – டி.ஜி.பி. உத்தரவு!

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் (16) என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ‘மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சக மாணவர்கள், ஆசிரியர் விஜயகுமார் குறிப்பிட்ட அந்த வார்த்தையைப் பயன்படுத்தி சாதிய ரீதியாக அகிலனைத் தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர். 

இது குறித்து அகிலன், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், கடந்த 21ஆம் (21.10.2026) தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பீளமேடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட  வழக்குமேல் விசாரணைக்காக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பீளமேடு காவல் நிலையத்தில் குற்ற எண் 446/2026-ன் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 115(2), 108 மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையரின் கடிதப் பரிந்துரையை ஏற்று, வழக்கினை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் இன்று (26.10.2026) அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, பீளமேடு காவல் நிலையத்தில் உள்ள  வழக்கு கோப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிசிஐடி துறையிடம் ஒப்படைக்குமாறு கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கைக் கையாள்வதற்கென தனியாக ஒரு புலனாய்வு அதிகாரியை நியமித்து, ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு மேல் விசாரணையை உடனடியாகத் தொடங்குமாறு சிபிசிஐடி இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.