லாரி – ஆம்னி பஸ் மோதல் கிளீனர் பலி; 49 பேர் காயம்

திருச்சி: ஈச்சர் லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில், பஸ்சின் கிளீனர் சிராஜ் உசேன், 39, உயிரிழந்தார். டிரைவர் உட்பட, 49 பயணியர் காயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து நேற்று (அக்.,25) மாலை, ராஜலட்சுமி என்ற தனியார் ஆம்னி பஸ் சென்னைக்கு புறப்பட்டது. இதில், 46 பயணியர் இருந்தனர். பஸ்சை திருநெல்வேலியைச் சேர்ந்த மீரான் மைதீன், 29, ஓட்டினார். அதேபகுதியை சேர்ந்த சிராஜ் உசேன், கிளீனராக இருந்தார்.

பஸ், நேற்று நள்ளிரவு, திருச்சி மாவட்டம், வலசுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, முன்னாள் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்து,

மீரான் மைதீன், சிராஜ் உசேன் பலத்த காயமடைந்தனர். பயணியர், 46 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர், பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, பயணியரை மீட்டு, மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிராஜ் உசேன் உயிரிழந்தார்.

இந்த விபத்து நடந்த, 100 மீட்டர் துாரத்தில், மேலும், இரு ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில், இருவர் காயமடைந்தனர். வளநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link