புதுடில்லி: 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
வாகனப் புகை வெளியேற்ற விதிமுறைகள், எரிபொருள் குறித்த குறிப்புகள் மற்றும் சோதனை நடைமுறைகளை நிர்வகிக்கும் விதிகளில் இ85 உடன் இ100 எனப்படும் 100% எத்தனால் எரிபொருளையும் இணைத்து 1989ம் ஆண்டு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதன்படி, 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வகையில் வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்ய வாகன உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அதேநேரத்தில் இ85 மற்றும் இ100 எரிபொருட்களை, அவற்றுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, சான்று அளிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இ20 பெட்ரோலில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் வழக்கமான பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் இந்த இ100 மற்றும் இ 85 பயன்படுத்த அனுமதி இல்லை.
தற்போது பிரேசில் மட்டுமே, கரும்பில் இருந்து கிடைக்கும் எத்தனாலை அதிகளவு எரிபொருளில் கலந்து விற்பனை செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், எரிபொருள் மாசுபாட்டை குறைக்கவும் நோக்கமாக கொண்டு இ100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல முன்னணி கார் நிறுவனங்களும் இ100க்கு உகந்த வாகனங்களை இந்திய சந்தையில் தயார் செய்து வரும் நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
