புதுடில்லி: வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் மற்றும் அவரது தாயை விடுதலை செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெற்கு டில்லி, சத்தர்பூரில் வசிப்பவர் நிர்மலா ஷக்யாவர். இவரது மகன் தருண் ஷக்யாவர். கடந்த, 2016ம் ஆண்டு பிப்., 24ல், தருணுக்கும், பாரதி சர்மா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
அதே ஆண்டு செப்., 20ம் தேதி, வீட்டின் படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் பாரதி சர்மா துாக்கில் தொங்கினார். உடற்கூறு ஆய்வில், துாக்கிலிடப்பட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாரதி சர்மாவின் தந்தை போலீசில் கொடுத்த புகாரில், ‘கூடுதல் வரதட்சணை கேட்டு, என் மகளை தருண் மற்றும் அவரது தாய் நிர்மலா ஆகிய இருவரும் துன்புறுத்தினர். திருமணத்தின் போது கொடுத்த நகைகளையும் அபகரித்துக் கொண்டனர். தருணுக்கு இருந்த கடனை தீர்க்க பணமும், கூடுதலாக நகையும் கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில், துாக்கிலிட்டு என் மகளை கொன்று விட்டனர்’ என, கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தருண் மற்றும் நிர்மலாவை கைது செய்தனர். இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹர்குவரிந்தர் சிங் ஜாகி பிறப்பித்த உத்தரவு:
வரதட்சணை தொடர்பான துன்புறுத்தலுக்கும், அந்தப் பெண்ணின் மரணத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க போலீஸ் தவறி விட்டது. அதேபோல, தற்கொலைக்கு துாண்டியதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. அனுமானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே ஆண்டில், ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பாரதி சர்மா மனநல சிகிச்சை பெற்றுள்ளார் என்பதை, தருண் தரப்பில் சமர்ப்பித்துள்ளனர். பாரதி சர்மாவை உடனடியாக மனநல மருத்துவமனையில் சேர்க்குமாறு, ஆகஸ்ட் மாதமே டாக்டர் அறிவுறுத்திருந்ததும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருமணத்துக்கு முன்பே மனநல மருந்துகளை உட்கொண்டு வந்த பாரதிக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மருந்துகளை நிறுத்தியுள்ளனர். அதற்கு பதிலாக, பேயோட்டும் சடங்கு செய்யப்பட்டுள்ளதையும், தருண் தரப்பில் நிரூபித்துள்ளனர்.
மேலும், தடயவியல் சான்றுகளிலும் உடல்ரீதியான போராட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளது. தருணின் கடன் தவணையும் மாதம் தவறாமல் திருப்பிச் செலுத்தப்பட்டதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தருண் மற்றும் நிர்மலா ஆகிய இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
