தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த “அர்னாப்” புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இது இன்று (அக்டோபர் 26) மாலை 05:30 மணி அளவில், மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் 15.6° வட அட்சரேகை மற்றும் 87.3° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கு-தென்கிழக்கே 490 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், பாபட்லாவுக்கு கிழக்கே 730 கி.மீ தொலைவிலும் மற்றும் அந்தமான் தீவுகளின் ஸ்ரீ விஜய புாரத்திற்கு (போர்ட் பிளேயர்) வடமேற்கே 730 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் வலுவடைந்து மிக தீவிர புயலாக மாறக்கூடும். அக்டோபர் 27 மாலை வரை இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28 முற்பகலில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிக்கு மிக அருகில் மிக தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும். அப்போது தரைக்காற்று மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
