எழுதியவர்: ரிச்சா சஹாய்
“ஒரு நிமிட சட்டவிரோதக் காவலைக் கூட சகித்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவமனை பங்குதாரரின் பங்குகளை வாங்குவதற்கான ரூ.24 கோடி ஒப்பந்தம் தொடர்பான மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையால் (சி.பி.சி.ஐ.டி) கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாக, எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை பங்குதாரர்களில் ஒருவர், தான் இந்த ஒப்பந்தத்திற்கு நிர்பந்திக்கப்பட்டதாகவும், அதன் கீழ் ரூ.5 கோடியைச் செலுத்திவிட்டு, எஞ்சிய ரூ.19 கோடியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ம் தேதி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். செலுத்திய ரூ.5 கோடி பணம் அந்த ஆய்வாளருக்கும் அவரது உயர் அதிகாரிகளுக்குமானது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
46 வயதான காவல் ஆய்வாளரின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.முருகன் அடங்கிய அமர்வு, ஆய்வாளரின் கைதும் காவலும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. “ஒரு குடிமகனின் தனிமனித சுதந்திரம்” தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், நீதிபதி மற்ற வழக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு அதை முதலில் விசாரிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து நீதிபதியும் வழக்குரைஞருமான லார்ட் ஆல்ஃபிரட் தாம்சன் டென்னிங் கூறியதை இந்த அமர்வு சுட்டிக்காட்டியது.
“ஒரு நிமிட சட்டவிரோதக் காவலைக் கூட சகித்துக் கொள்ள முடியாது என்பதால், இந்த விவகாரத்தை இன்றே முடித்து வைக்க முடிவு செய்துள்ளோம். ஆட்கொணர்வு மனுவை விரைவாகவோ அல்லது உடனடியாகவோ முடித்து வைப்பதில் எந்த விதிவிலக்கும் இருக்க முடியாது” என்று அக்டோபர் 23-ம் தேதியிட்ட அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 முதல் காவலில்
தன் கணவரின் கைதும் காவலும் சட்டவிரோதமானது என அறிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி காவல் ஆய்வாளரின் மனைவி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஆய்வாளரிடம் கைதிற்கான காரணங்கள் வழங்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.முருகன் கவலை தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையின் இரண்டு பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பங்குப் பிரச்னையிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு பங்குதாரர், மற்றொரு பங்குதாரர் தன் மீது பட்டியலின மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்ய ஒரு நபரை ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு பின்னர் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், மருத்துவமனையின் இரண்டு பங்குதாரர்களும் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஒரு பங்குதாரர் மற்றவரின் பங்குகளை வாங்க ரூ.24 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டார். அவர் ரூ.5 கோடியைச் செலுத்திவிட்டு, மீதமுள்ள ரூ.19 கோடியை விரைவில் தருவதாகக் கூறினார்.
சி.பி.சி.ஐ.டி விசாரணையைத் தொடர்ந்த பிறகு, பணம் செலுத்திய பங்குதாரர் தான் அந்த ஒப்பந்தத்திற்கு நிர்பந்திக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் செலுத்திய ரூ.5 கோடி பணம் காவல் ஆய்வாளருக்கும் அவரது உயர் அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்தே, மிரட்டிப் பணம் பறிப்பு, கிரிமினல் சதி திட்டம் தீட்டுதல் மற்றும் அரசு ஊழியர் சட்டத்தை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 16-ம் தேதி விசாரணை நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீசரண் ரங்கராஜனும், அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சி. கிறிஸ்டோபரும் ஆஜராகினர்.
‘ஜாமீன் வழங்கவில்லை, நிபந்தனையற்ற விடுதலை’
ஆய்வாளருக்குக் கைதிற்கான காரணங்கள் வழங்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிவித்தது. மேலும், காரணங்கள் வழங்கப்பட்டதாக விசாரணை நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் எதையும் பதிவு செய்யவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
காவல் ஆய்வாளர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதாலும், அவரது மனைவி ஒரு வழக்கறிஞர் என்பதாலும், அவர்கள் அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற காரணத்தைக் கூறி, கைதிற்கான காரணங்கள் வழங்கப்படாதது குறித்த ஆட்சேபனையை விசாரணை நீதிபதி நிராகரித்திருந்தார். விசாரணை நீதிபதியின் இந்த நியாயத்தைப் விமர்சித்த உயர் நீதிமன்றம், இதுபோன்ற காரணங்களுக்காக அரசியலமைப்புப் பாதுகாப்புகளை விட்டுக்கொடுக்க முடியாது என்று வலியுறுத்தியது.
“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 (வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரப் பாதுகாப்பு) மற்றும் பிரிவு 22 (சட்டவிரோதக் கைது மற்றும் காவலுக்கு எதிரான பாதுகாப்பு) ஆகிய இரண்டும் மிகவும் புனிதமானவை என்பதை விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு நினைவூட்டுகிறோம். இந்த இரண்டு பிரிவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கமே நாட்டின் சட்டமாகும். அது வார்த்தைக்கு வார்த்தை அதன் முழுமையான எண்ணத்தோடு பின்பற்றப்பட வேண்டும். சில அடிப்படை உரிமைகள் எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாதவை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
காவல் அதிகாரி ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற அமர்வு, அப்படிப்பட்ட நபருக்கும் உரிய சட்ட நடைமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. “பயங்கரவாதிகளுக்குக் கூட நிவாரணம் வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 22 ஆகிய பிரிவுகளை நாம் பயன்படுத்தும்போது, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அரசியலமைப்பின் 3-வது பகுதியில் உள்ள பாதுகாப்பை மறுப்பது நீதியாகாது” என்றும் கூறியது.
மேலும், ஒரு நபரின் குணநலன் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவை, அவரது கைதும் காவலும் அவரது சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதா என்ற கேள்விக்குச் சம்பந்தமில்லாதவை என்றும் உயர் நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது.
ஆய்வாளரைக் கையாண்டதில் சி.பி.சி.ஐ.டி உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், கடுமையான சட்டவிரோதங்கள் அவரது கைதையும் காவல் வைப்பையும் பாதித்துள்ளதாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது.
காவல் ஆய்வாளரின் கைது, தடுப்புக்காவல் மற்றும் அதைத் தொடர்ந்த ரிமாண்ட் ஆகியவற்றைச் சட்டவிரோதமானது என அறிவித்த உயர்நீதிமன்ற அமர்வு, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. “நாங்கள் ஜாமீன் வழங்கவில்லை. மாறாக, அவரை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவாகக் கூறியது.
