தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, ஐபிஎஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, கைதிகள் தப்பிப்பதற்கான காரணங்கள் மற்றும் முக்கிய விவரங்களை வெளிப்படுத்தினார்.
நேற்று இரவு சுமார் 10 மணி முதல் 11 மணி அளவில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் திடீரென கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் அவர்கள் Epilepsy டிராமா போட்டுள்ளனர். அதாவது தங்களோடு அறையில் இருந்த ஒரு கைதிக்கு திடீரென உடம்பெல்லாம் வெட்டி இழுத்து வலிப்பு (Epilepsy / Seizure) வந்துவிட்டதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் ஒரு சக கைதியின் உயிருக்கு ஆபத்து என நினைத்த சிறைக் காவலர்கள், பதறியடித்துக்கொண்டு உடனடியாக மருத்துவ உதவி செய்வதற்காக அறையின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அது சிறையில் இருந்து தப்புவதற்காக அவர்கள் போட்ட மிகக் கச்சிதமான நாடகம் என்பது காவலர்களுக்கு அப்போதுதான் தெரியவந்தது.
காவலர்கள் உள்ளே நுழைந்த அடுத்த வினாடியே, வலிப்பு வந்தது போல் நடித்த கைதி உட்பட மற்ற கைதிகள் ஒன்று சேர்ந்து காவலர்களைத் திடீரெனச் சூழ்ந்து தாக்கினர். காவலர்களை நிலைகுலையச் செய்து தள்ளிவிட்டு, சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு மொத்தம் 17 கைதிகள் கண் இமைக்கும் நேரத்தில் சிறை வளாகத்தை விட்டு வெளியே தப்பி ஓடிவிட்டனர்.
இதை எல்லாம் 2-3 கைதிகள்தான் மாஸ்டர்மைண்ட் போல இருந்து திட்டமிட்டனர். மற்ற கைதிகள் அவர்கள் சொன்னதை கேட்டு நடந்துள்ளனர். சம்பவம் நடந்த தெக்கம்பட்டி சிறைக்கு விரைந்து வந்த தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கவுதம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி விஜயேந்திர பிதாரி பேசுகையில்:, “சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் தங்களுக்கு வலிப்பு வந்தது போல நடித்துவிட்டு ஏமாற்றித் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய அனைத்துக் குற்றவாளிகளின் முழு விபரங்களும் காவல்துறையிடம் உள்ளன. அவர்களைப் பிடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறைப் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சிறை நிர்வாகத் தரப்பில் ஏதேனும் கவனக்குறைவு இருந்ததா என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
தப்பியோடிய 17 கைதிகளையும் பிடிக்க தலா ஒரு கைதிக்கு ஒரு தனிப்படை வீதம் மொத்தம் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
எல்லைகளில் தீவிர சோதனை: தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பேருந்துகள், கார்கள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளா எல்லை உஷார்: தேனி மாவட்டம் கேரள எல்லைக்கு அருகில் இருப்பதால், தமிழக-கேரள எல்லையோர சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனத் தணிக்கை நடக்கிறது. கேரளா மாநில போலீசாருக்கும் தப்பியோடிய கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதிகளில் தேடுதல்: சிறைச்சாலை அமைந்திருக்கும் பகுதிக்கு அருகிலேயே அடர்ந்த காடுகள் மற்றும் மலைப் பகுதிகள் இருப்பதால், கைதிகள் அங்கு மறைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினரின் உதவியுடன் காட்டுப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
போலீசாரின் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையின் பலனாக, தப்பியோடிய கைதிகளில் 4 பேர் உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 கைதிகளையும் விரைந்து பிடிக்க அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக கைதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற மனிதாபிமான அடிப்படையிலான காவலர்களின் உதவியையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சினிமா பாணியில் கைதிகள் தப்பியோடிய இந்த சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
