தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இனி பக்தர்கள் காலை மற்றும் இரவு நேரங்களிலும் இலவச அன்னதானம் பெறும் வகையில் புதிய திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான, சத்து நிறைந்த உணவு வகைகளை வழங்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், பழனி, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 17 முக்கிய கோயில்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக கோயில்களில் அன்னதானமாக சாதம் மற்றும் அதனுடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பலர் இந்த உணவை உட்கொள்ள முடியாத நிலை உள்ளதால், ஆரோக்கியமான மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு வகைகளைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
“இது தற்போது விவாதக் கட்டத்தில் உள்ளது. சமையலறை வசதிகள் மற்றும் இதர அம்சங்களை ஆய்வு செய்து வருகிறோம். பக்தர்களுடன் கலந்தாலோசித்த பிறகு உணவு பட்டியல் மற்றும் நேரம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
பிரசாத தயாரிப்பில் தரக்கட்டுப்பாடு திட்டம் தொடக்கம்
இதற்கிடையே, தமிழகக் கோயில்களில் பிரசாதத் தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தரம் பிரித்து சீர்படுத்தும் புதிய திட்டத்தை அமைச்சர் சி. ரமேஷ் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி அவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ்,
“கோயில்களில் வழங்கப்படும் 10 பொதுவான பிரசாதங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், உற்பத்திச் செலவு, அளவு மற்றும் சில்லறை விற்பனை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தரம், விலை மற்றும் சுகாதாரத்தில் சீரான தன்மை உறுதி செய்யப்படும்.
பிரசாதத்தின் தரம் குறித்து நீண்ட நாட்களாகப் புகார்கள் இருந்து வந்த நிலையில், ஒப்பந்தக்காரர்கள் தயாரித்து வழங்கும் முறைக்கு மாற்றாக, தகுந்த வசதியுள்ள கோயில்களிலேயே நேரடியாகப் பிரசாதம் தயாரிக்க ஊக்கமளிக்கப்படும்.
பிரசாதத் தயாரிப்புக்குச் சான்றளிக்கப்பட்ட ஆவின் நெய் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளில் கொள்முதல் செய்யப்படும் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படும். மேலும், சுற்றுச்சூழல் உகந்த இலைத் தட்டுகள், சீல் செய்யப்பட்ட பெட்டிகள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.
பேக்கிங் செய்யப்பட்ட பிரசாதங்களில் உற்பத்தித் தேதி, காலாவதி தேதி, நிகர எடை, மற்றும் அதிகபட்ச சில்லறை விலை போன்ற விவரங்களை நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கோயில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
