‘முதல்வர் விஜய்க்கு உண்மையிலேயே மக்கள் மேல் அக்கறை இருக்கிறதா?’-திமுக பரந்தாமன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ”திமுக தலைவர் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என சொல்லக் கூடிய அரசியல் அரைவேக்காட்டுத் தனமாகப் பேசக் கூடிய அமைச்சர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் தமிழ்நாட்டு கைதிகளும் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி கரூரில்  41 பேரை கொன்று குவித்துவிட்டு ஓடுனீர்களோ அதேபோல சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன பார்முலாவை உருவாக்கி கொடுத்தீர்களோ அதைத்தான் செய்கிறீர்கள். எனவே பலமுறை சொல்லிவிட்டோம் சி.டி.நிர்மல்குமார் அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சராக பணியாற்ற தெரிந்தால் வேலை செய்யுங்கள் இல்லையென்றால் விட்டுவிட்டு போங்கள்.

எதற்கு இந்த பதவி உங்களுக்கு? மக்களுடைய வரிப்பணத்தில் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு ஏன் ஏமாற்றுகிறீர்கள்? முதலமைச்சருக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? மக்களுடைய பாதுகாப்பு பற்றி அவருக்கு கவலை இருக்கிறதா? பெண்களுடைய பாதுகாப்பு பற்றி கவலை இருக்கிறதா? குழந்தைகளுடைய நலன் மீது அக்கறை இருக்கிறதா? குழந்தைகளால் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றோம் என்று பேசுகிறார். தங்கச்சி, சகோதரர், தாய்மாமன் என்றெல்லாம் சொன்னீர்களே சார்…. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதில் கிட்டத்தட்ட 20 பேர் உங்களுடைய கட்சி நிர்வாகிகள் தான். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றப் பின்னணிகள் எடுத்தீர்கள் என்றால் 20 பேருக்கு மேல் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தவெக நிர்வாகிகள் தான். கொஞ்சம் தயவு செய்து ஆட்சி செய்யுங்கள். மக்களுக்கு பணியாற்றுங்கள்; எங்களுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. உங்களை திட்டிவிட்டு இப்படி கேள்வி கேட்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. 

மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் தயவுசெய்து வேலை பாருங்கள். அதை எல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்; யார் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன்; பிரஸ்-சை பார்க்க மாட்டேன் என்றால் என்ன அர்த்தம். ஐந்து மாதம் ஆகிறது நீங்கள் ஆட்சிக்கு வந்து, இதுவரை நீங்கள் பிரஸ் மீடியாவை பார்க்கவில்லை. அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைக்கிறீர்கள். திமுகவை வசை பாடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுங்கள்”என்றார்.