மதுரை–குருவாயூர் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்டாடோம் (கண்ணாடிப் பெட்டி) ரயில் சேவையை நிரந்தரமாக்கி தினசரி இயக்க வேண்டும் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி நேரில் மனு அளித்துள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய தென் மாவட்ட மக்களின் ரயில் பயண வசதிகளை மேம்படுத்தவும், பல வருடங்களாக நிலுவையில் உள்ள ரயில்வே கோரிக்கைகளுக்குத் தீர்வு காணவும் பா.ஜ.க சார்பில் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை – குருவாயூர் இடையே இயக்கப்படும் விஸ்டாடோம் ரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதன் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட மக்களின் ரயில் பயண வசதிகளை மேம்படுத்தவும், நீண்டகாலக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணவும் இன்று சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் (ஜி.எம்) மற்றும் முதன்மை தலைமைப் போக்குவரத்து மேலாளர் (சி.பி.டி.எம்) ஆகியோரைச் சந்தித்தேன்.
மதுரை–குருவாயூர் ரயிலில் விஸ்டாடோம் பெட்டியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்களின் தேவைகளை வலியுறுத்தி நினைவூட்டல் மனுக்களை வழங்கினேன்.
முக்கிய ரயில் சேவைக் கோரிக்கைகள்:
விஸ்டாடோம் சேவையை நிரந்தரமாக்கி, தினசரி இயக்கி, கூடுதல் பெட்டி இணைத்தல்.
பொதிகை விரைவு ரயிலின் எழும்பூர் புறப்பாட்டை இரவு 8:30 மணிக்கு அல்லது அதற்குப் பின்னர் மாற்றுதல்.
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக தினசரி திருநெல்வேலி–பெங்களூரு விரைவு ரயில் இயக்குதல்.
மேட்டுப்பாளையம்–திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக்குதல்; திருநெல்வேலி–கொல்லம் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்குதல்.
பயணிகள் வசதி மற்றும் கட்டமைப்புக் கோரிக்கைகள்:
செங்கோட்டையில் 5வது நடைமேடை, மின்தூக்கிகள், கூடுதல் பாதை இணைப்பு.
செங்கோட்டை–தென்காசி இரட்டைப் பாதை; தென்காசியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு முனையம்.
செங்கோட்டை, சங்கரன்கோவிலை அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தில் சேர்த்தல்.
கடையநல்லூர், சங்கரன்கோவிலில் லூப் பாதை வேகத்தை உயர்த்துதல்.
முக்கிய நிலையங்களில் பெட்டி இருப்பிடப் பலகைகள், பயணிகளுக்குக் கூடுதல் நிழற்கூரைகள்.
இந்தக் கோரிக்கைகள் மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அன்றாடம் ரயிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் தேவைகளைச் சார்ந்தவை.
கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்த அதிகாரிகளுக்கு நன்றி
மனு அளிப்பதோடு எங்கள் பணி முடிவதில்லை. ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் தொடர்ந்து நடவடிக்கைகளை வலியுறுத்தி, மக்களுக்கான பயன்கள் கிடைக்கப் பாடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
