நவ.1 முதல் பழநி கோயில் பிரசாதங்களின் விலை உயர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

பழநி: நவ.1ம் தேதி முதல் பழநி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பொதுவான திட்டத்தின் படி, ஒரே விற்பனை விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தரமான மூலப் பொருட்களைக் கொண்டு பிரசாதம் தயார் செய்து விற்பனை செய்யும் வகையில் நவ.1-ம் தேதி முதல் பிரசாதங்களின் விலை உயர்த்தப்படுகிறது.

அதாவது, லட்டு (50 கிராம்), அதிரசம் (50 கிராம்), சர்க்கரை பொங்கல் (150 கிராம்), புளியோதரை (150 கிராம்) தலா ரூ.20-க்கும், முறுக்கு (50 கிராம்) ரூ.25-க்கும், தேன் தினை மாவு (50 கிராம்) ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link