உலகிலேயே அதிக புகைப்படங்கள் எடுக்கப்படும் சில அழகிய ஏரிகள், அதே வேளையில் உலகின் மிகவும் ஆபத்தான நீர்நிலைகளாகவும் திகழ்கின்றன. இந்த ஏரிகளுக்கு வண்ணமயமான அழகை தரும் எரிமலைகளே, அவற்றில் அமிலத்தையும், நஞ்சையும், சுட்டெரிக்கும் வெப்பத்தையும் நிரப்புகின்றன. வழிகாட்டிகளின் துணையோடு பாதுகாப்பான இடங்களில் இருந்து மட்டுமே இவற்றை பார்க்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஏரிகளில் நீந்தவோ, தண்ணீரை குடிக்கவோ கூடாது. இயற்கையின் இந்த ஆபத்தான அழகிய ஏரிகள் குறித்து பார்க்கலாம்.
தூங்கினா பிரான்ஸ்; எழுந்தா சுவிட்சர்லாந்து: ஒரே அறையில் 2 நாட்டில் தூங்கும் சுற்றுலாப் பயணிகள்
குய்லோடோவா எரிமலை ஏரி, ஈக்வடார்
சரிந்து விழுந்த ஒரு எரிமலையின் நடுவே அமைந்துள்ள இந்த ஏரி, அடர்ந்த மரகதப் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். தெளிவான நாட்களில் இதன் நீர் ஒரு கண்ணாடியைப் போல பிரகாசிக்கும். ஆனால், எரிமலை வாயுக்களால் இந்த நீர் அதிதீவிர அமிலத்தன்மையுடனும் நஞ்சாகவும் மாறியுள்ளது. நீரிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு, ஆக்சிஜன் அளவை ஆபத்தான முறையில் குறைத்துவிடும். இங்கு நீந்துவதும் படகு ஓட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளது; தடையை மீறியவர்கள் கடுமையான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
லகுனா காலியன்டே, கோஸ்டாரிக்கா
போவாஸ் எரிமலைக்குள் அமைந்துள்ள இந்த ஏரி, பச்சை, நீலம், மஞ்சள், சாம்பல் எனத் தன் நிறத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். இது உலகிலேயே அதிக அமிலத்தன்மை கொண்ட ஏரிகளில் ஒன்றாகும். இதன் நீர் பேட்டரி அமிலத்தை விட வீரியமானது. இதில் நச்சு உலோகங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஏரி அடிக்கடி அமில மழை மற்றும் அமில மூடுபனியை உருவாக்கும். சில நேரங்களில் வெடித்து பாறைகளையும் தண்ணீரையும் வான்நோக்கி வீசும். இதன் அருகில் நிற்பதே ஆபத்தானது.
கெலிமுட்டு ஏரிகள், இந்தோனேசியா
ஃபுளோரஸ் தீவில் அருகருகே அமைந்துள்ள 3 ஏரிகள் இவை. ஒன்று டர்க்காய்ஸ் – நீல நிறத்திலும், இன்னொன்று பச்சை அல்லது கருப்பு நிறத்திலும், மூன்றாவது அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திலும் இருக்கும். இந்த ஏரிகளின் நிறங்கள் காலப்போக்கில் மாறும். அதிகளவிலான சல்ஃபர் இருப்பதால் இதன் நீர் தோலையே எரித்துவிடும் அளவுக்குக் கொடூரமான அமிலத்தன்மை கொண்டது. இதில் தவறி விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர். திடீரென வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரை பறிக்கக்கூடியவை.
லகுனா வெர்டே, பொலிவியா
ஆண்டீஸ் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 4,300 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, பிரகாசமான மரகதப் பச்சை நிறத்தில் ஜொலிக்கும். இதில் உள்ள தாமிரம் தான் இந்த அழகிய நிறத்திற்கு காரணம். ஆனால், இந்த நீரில் ஆபத்தான ஆர்சனிக், ஈயம் மற்றும் பிற நச்சு உலோகங்கள் அதிகளவில் கலந்துள்ளன. தொலைவில் இருந்து மட்டுமே இதைப் பார்க்க முடியும், தொடுவது கூடப் பேராபத்து.
நாட்ரான் ஏரி, தான்சானியா
பிரகாசமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஏரியின் நீர் சில இடங்களில் 60 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கும். பிளீச்சிங் பவுடரைப் போல அதிதீவிர காரத்தன்மை கொண்ட இதன் நீர், தோலை பதம் பார்த்துவிடும். இந்த ஏரியின் தாதுக்களால், இதன் அருகே இறந்து விழும் விலங்குகள் கல்லாய் உறைந்து சிலை போல மாறிவிடும். இங்கு ஃபிளமிங்கோ பறவைகள் மட்டுமே வாழ முடியும்.
