Ajith 2031: விஜய்யை எதிர்க்கும் ஒரே தலைவர் அஜித்! 2031 இல் சமத்துவ முதல்வராவார்! சிலை திறந்த ரசிகர் சிலாகிப்பு

சென்னை: சென்னையில் அஜித்துக்கு சிலை வைத்துள்ள ரசிகர் ஒருவர், அரசியலில் விஜய்யை எதிர்த்து நிற்கும் தலைவர் அஜித்தான் என்றும் 2031 ஆம் ஆண்டு சமத்துவ முதல்வர் என்றும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாங்காடு அருகே உள்ள கோவூரில் அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடிகர் அஜித்திற்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பையொட்டி 108 தேங்காய் உடைத்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்தக் கழகத்தின் தலைவர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகத்தை விரைவில் முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய இருக்கிறோம். அரசியலில் விஜய்யை எதிர்த்து நிற்கும் தலைவர் அஜித்தான். 2031 ஆம் ஆண்டு அஜித் சமத்துவ முதல்வர். அதாவது எல்லா மக்களுக்குமான தலைவராக அவர் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்ததை அடுத்து ரஜினிகாந்தையும் அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக அரசியலுக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் பிடிகொடுக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று பெருகி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்களின் நலம் கருதி அரசியலுக்கு வரும் முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

அது போல் விஜய், சிம்பு, சூர்யா, அஜித் உள்ளிட்டோரையும் அரசியலுக்கு வருமாறு அழைத்திருந்தனர். சிம்பு அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தை டி.ராஜேந்தர் விரும்பினார்.

விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக கடந்த 2024 ஆம் ஆண்டு பதிவு செய்தார். இதையடுத்து 2026-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டு தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

விஜய்யின் கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறும் என யாரும் நினைக்கவில்லை. இந்த சூழலில் சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோரும் அரசியலுக்கு வர ஆயத்தமாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளனர். அவர்கள் சும்மா இருந்தாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை.

தனுஷ் அண்மையில் டெல்லியில் 2 நாட்கள் முகாமிட்டிருந்தார். அங்கு அவர் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முகாமிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனுஷ், தனது மகளிரணியினரை சந்தித்து குத்துவிளக்கை பரிசாக கொடுத்தார். அதில் தாமரை சின்னம் பதியப்பட்டிருந்தது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் அஜித்தையும் அரசியலுக்கு வருமாறு பலரும் அழைத்து வருகிறார்கள். ஆனால் அஜித்திற்கு அப்படி ஒரு ஆசை இல்லை என்பதை அவர் 2019ஆம் ஆண்டிலேயே அறிவித்துவிட்டார். அந்த ஆண்டு நடிகர் அஜித் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், “திரைத்துறையில் மிகவும் நேர்மையானவர் அஜித். அவர் பலருக்கு நல்லது செய்துள்ளார்.

அவரை போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். உடனே அஜித் இதற்கு ஒரு விளக்கமளித்திருந்தார்.

அதில் அரசியலுக்கு நான் வர விருப்பமில்லை. சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன். எனது பெயரையோ புகைப்படத்தையோ எந்த ஒரு அரசியல் கட்சியோ இயக்கமோ பயன்படுத்தக் கூடாது” என அஜித் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அஜித்தை பாஜகவில் சேர அழைப்பு விடுத்த தமிழிசைக்கு அவர் பதிலடி கொடுத்ததாகவே பார்க்கப்பட்டது. அப்போது தமிழிசை பதிலளிக்கையில், “அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சில நடிகர்களைப் போல சொல்லாமல், நடிகர் அஜித் தெளிவான முடிவை அறிவித்துள்ளார். அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று அஜித் கூறியிருப்து வரவேற்கத்தக்கது. நான் அஜித்தை பாஜகவில் சேருவதற்காக அழைக்கவே இல்லை. நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தைக்கு அஜித் உதவியிருந்தார். இவ்வாறு தமிழிசை கூறியிருந்தார். அத்துடன் கடந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட திருவான்மியூர் பூத்தில் முதல் ஆளாக வந்து அஜித் வாக்களித்தார். தற்போது சினிமா, கார் ரேஸிங்கில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.