தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள ஆழ்வார் கற்குளத்தை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் வீட்டின் முன்பாக கழிவுநீர் ஓடுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் தரப்பினருக்கும், சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒருவருக்கொருவர் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகி றது. இதில், மாரியப்பன் மகன் இசக்கிராஜா (20) உயிரிழந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும், எதிர் தரப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஸ்.பி. சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 14 பேர் மீது ஸ்ரீவைகுண்டம் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து ள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாளில் 6 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 22-ம் தேதி அதிகாலை குலசேரன் பட்டினத்தில் வேல்முருகன் (20), அன்று இரவு சாத்தான்குளம் பன்னம்பாறையில் விவசாயி கொம்பையா என்ற கணேசன் (64), 23-ம் தேதி அதிகாலை சாத்தான்குளம் முதலூரில் மேரி விஜிலா (39), அதே நாள் காலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் பழனி (45), 24-ம் தேதி அதிகாலை நாசரேத் கைலாசபுரத்தில் சாமுவேல் (35), ஏரலில் 23-ம் தேதி தாக்குதலுக்கு உள்ளாகி 25-ம் தேதி இறந்த தனுஷ்கோடி, 25-ம் தேதி இரவில் ஆழ்வார்கற்குளத்தில் மாணவர் இசக்கிராஜா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு: ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்த படுகொலை நடந்திருக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக் குடியில் நாளுக்கு நாள் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
சரிந்து போயிருக்கும் சட்டம்- ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. விளக்கம்
தொடர் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத் அளித்துள்ள விளக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 6 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த கொலை தொடர்பாக மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தவறான கருத்து நிலவுகிறது. மாவட்டத்தில் எந்த கொலை சம்பவம் நடந்தாலும் காவல் துறை சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் நடந்த 6 கொலை சம்பவங்களையும் காவல் துறை விரிவாக ஆய்வு செய்ததில், அதில் ஈடுபட்ட நபர்கள் மீது இதற்கு முன்னால் எந்த வழக்கும் இல்லை. மேலும், அவர்கள் யாரும் குற்றவாளிகள் பட்டியலில் வைக்கப்பட்டு காவல் துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் அல்ல.
இந்த 6 வழக்குகளில் 2 வழக்குகள் நிலப் பிரச்சினை தொடர்பாகவும், 2 வழக்குகள் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாகவும், ஒரு வழக்கு அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்டமோதல் தொடர்பாகவும், மற்றொரு வழக்கு காதல் பிரச்சினை தொடர்பாகவும் நடந்துள்ளது.
அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துள்ளோம். இந்த வழக்குகள் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அக்டோபர் 26-ம் தேதி வரை 65 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டில் 59 கொலை வழக்குகள் தான் பதிவாகியுள்ளன.
10 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. மாவட்டத்தில் கொலை வழக்குகளை குறைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்துள்ளோம். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கிறது. அதனை தொடர்ந்து பராமரிப்போம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
