கிராமங்களின், விவசாயத்தோட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள், அதிக அளவில் விளைச்சல் இருக்கும் போது, வயலுக்கு உரிமையானவர்கள் கண் திருஷ்டி படாமல் இருக்க சோளக்காட்டு பொம்மை, பழைய செருப்பு மற்றும் ஓவியம் வரையப்பட்ட பானை போன்ற பொருட்கள் தோட்டங்களில் தொங்கவிடுவது வழக்கம்.
ஆனால், இங்கு ஒரு விவசாயி வித்தியாசமான முறையில் நடிகைகளின் படங்களைத் தொங்கவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவானந்த் என்ற விவசாயி. இவர் தனது நிலத்தில் மிளகாய் செடியைப் பயிரிட்டுள்ளார். இந்த மிளகாய் தோட்டத்தில் மிகவும் செழிப்பாகக் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. இதனால், அபரிமிதமான விளைச்சலின் காரணமாகக் காய்த்துத் தொங்கும் மிளகாய்களைப் பார்த்து அந்த வழியே செல்லும் மக்கள் கண் திருஷ்டி வைக்கக் கூடாது என்பதற்காக வழக்கம் போலத் திருஷ்டி பொம்மை வைக்கத் திட்டமிட்டார். ஆனால், முடிவை மாற்றிய அவர் திருஷ்டி பொம்மைகளுக்குப் பதிலாகக் கன்னட மற்றும் தென்னிந்தியத் திரைத்துறையில் பிரபலமான ரச்சிதா ராம் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகளின் பெரிய புகைப்படங்களை, அந்த தோட்டத்தில் வைத்துள்ளார்.
நல்ல விளைச்சல் கொண்டுள்ள பயிர்களின் மீது மற்றவர்கள் கண்பட்டு விடுமோ? என்ற யோசனையில் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளார். இதன் மூலமாகத் திருஷ்டி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதாவது, இந்த வழியாகச் செல்வோர் தோட்டத்தில் உள்ள பயிர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்த நடிகைகளின் படங்களையே பார்த்துச் செல்வார்கள். இதனால் பயிர்களுக்குக் கண் திருஷ்டி ஏற்படாது என்ற நோக்கத்தில் அந்த விவசாயி இதனைச் செய்துள்ளார். தற்போது இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
