சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் தொன்மையான சிலைகள் திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனை பெற்று சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூருக்கு தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.விஜய நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.விஜய் நாராயணன் தரப்பில் வழக்கறிஞர்கள் ராம் சங்கர் மற்றும் பி.வி.யோகேஸ்வரன் ஆஜராகி வாதாடினர்.
‘பல்வேறு பழங்கால கோயில் சிலைகளை திருடி வெளிநாட்டுக்கு வித்த சுபாஷ் சந்திர கபூர் ஒரு வழக்கின் தண்டனை முடிந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிக் கிளை உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.
இந்த விவகாரத்தில் அவரை திரும்ப அனுப்புவதோ அல்லது சிறையில் அடைப்பதோ முக்கியமல்ல, அவரால் கடத்தப்பட்டு வெளிநாட்டில் விற்கப்பட்ட அந்த சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்பட வேண்டும் எனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
அதற்கு சுபாஷ் சந்திர கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, ‘சுபாஷ் சந்திர கபூர் ஒரு சிலை கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று தற்போது 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருடைய தண்டனை காலமும் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் 79 வயதான அந்த நபரை சிறையில் அடைத்து வைக்கக்கூடாது. அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதால் அவரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சுபாஷ் சந்திர கபூர் விவகாரத்தில் மாநில அரசு ஏன் மேல்முறையீடு செய்ய முனைப்பு காட்ட வில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும் சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மன் நாட்டுக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர் டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல சிலைக் கடத்தல் குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரை சிறையிலிருந்து விடுவித்து, உடனடியாக ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், சுபாஷ் சந்திர கபூர் இந்தியாவை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு தப்பிச் செல்வதற்கு முழுமையாகத் தயாராகி வந்தார்.
இவ்வளவு பெரிய சர்வதேசக் குற்றவாளி இந்தியாவை விட்டு வெளியேறத் தயாரான போதிலும், இந்த விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசோ அல்லது தமிழக அரசோ எந்தவொரு துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், எஸ்.விஜய நாராயணன் என்ற தீவிர இறைபக்தர் சார்பில் நாங்கள் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, அரசாங்கம் செய்யத் தவறிய மேல்முறையீட்டு வழக்கை தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்தோம்.
அவர் சிறையில் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல; அவரால் திருடப்பட்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் விற்கப்பட்டுள்ள இந்தியாவின் விலைமதிப்பற்ற பல நூறு கோடி மதிப்புள்ள தொன்மையான சிலைகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மேலும் 41 தொன்மையான சிலைகளை இந்தச் சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து கைப்பற்ற வேண்டியுள்ளது. இதுமட்டுமன்றி, அமெரிக்காவிலிருந்து இந்தச் சிலைக் கடத்தல் நெட்வொர்க்கை இயக்கி வந்த அவரது சொந்தத் தங்கையிடமிருந்து மேலும் 30 சிலைகளையும், அதன் மூலம் ஏறத்தாழ 280 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான சிலைகளையும் இந்திய அரசு இன்னும் மீட்டெடுக்க வேண்டியுள்ளது. இவன் இந்தியாவுக்குள் விசாரணையில் இருந்தால் மட்டுமே இந்தச் சிலைகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க முடியும்.
எங்களது இந்த வலுவான வாதங்களை முழுமையாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனி நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிலளிக்கக் கோரி அதிகாரப்பூர்வ நோட்டீஸையும் பிறப்பித்துள்ளது” என்றார்.
