எழுதியவர்:ஸ்வேதா ஷர்மா
‘மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சி, தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுளள்ள சஷி செல்லையா, ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்றவர். காவல்துறையில் அதிகாரியாக, சிறை அதிகாரியாக, ஆயுத நிபுணராக என 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பிய பிறகு, சஷி செல்லையா ஒரு சமையல் கலைஞரின் (Chef) தொப்பியையும் மேலாடையையும் அணிந்துகொண்டு, ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ (MasterChef Australia) போட்டியில் பங்கேற்க முடிவெடுத்தார்; அந்த போட்டியின் இறுதியில் வெற்றியும் பெற்ற அவர், தற்போது ‘மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளதார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸின் நேர்காணலில் பேசிய சஷி செல்லையா, “நடந்ததெல்லாம் வரலாறு” என்றும், தற்போது மீண்டும் அதே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இந்த முறை ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ (Celebrity MasterChef Tamil) நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியது குறித்தும் பேசியுள்ளார்.
சிங்கப்பூரில் வளர்ந்த தென்னிந்திய சமையல் கலைஞரான இவர், தனது பயணம், கோவிட் காலம் மிகவும் கடினமாக இருந்தது, அவரது புதிய அவதாரம் மற்றும் சமந்தா ரூத் பிரபுவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சீசன் 10-ல் வெற்றி பெற்ற பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஒருவேளை நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால், வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சீசன் 10 நிச்சயமாக எனது வாழ்க்கையை மாற்றியது. அந்தப் போட்டியில் வென்றது எனக்கு ஒரு மிகப்பெரிய நன்மையாக அமைந்தது. ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், இந்தத் துறையில் நுழைவதற்கும் ஒரு அனுபவமிக்க சமையல் கலைஞருக்கு 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகக்கூடிய விஷயம், எனக்கு மிகக் குறுகிய காலத்தில், அதாவது கிட்டத்தட்ட ஒரே ஆண்டிற்குள் சாத்தியமானது. ஆனால் அதே நேரத்தில், இந்தத் துறையில் நுழைவது எளிதாக இருக்கவில்லை. ஏனென்றால், மாஸ்டர்செஃப் அனுபவமும் நிஜமான சமையல் துறை அனுபவமும் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு விஷயங்கள்.
அந்த நிகழ்ச்சியில் வென்றது எனக்கான கதவுகளைத் திறந்தது, ஆனால் துறைக்குள் காலடி எடுத்து வைத்ததும் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. வெற்றி பெற்ற உடனே ஒரு உணவகத்தைத் தொடங்கி, இந்தத் துறையில் இறங்கி வேலை செய்தது எனக்குப் மிகப்பெரிய அனுபவத்தையும், அதைவிட முக்கியமாகத் துறை சார்ந்த மதிப்புமிக்க பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன், நான் வளர்ச்சி அடைவதற்கும் ஒரு சிறந்த சமையல் கலைஞராக மாறுவதற்கும் உதவியது.
நான் மாஸ்டர்செஃப்பில் வெல்லவில்லை என்றால், இன்று நான் எங்கே இருந்திருப்பேன் என்று நேர்மையாக எனக்குத் தெரியவில்லை. நான் அப்போதும் உணவுத் துறைக்கு வந்திருக்கலாம் அல்லது மீண்டும் காவல்துறைக்கே திரும்பியிருக்கலாம். ஏனெனில் அந்தப் பாதை நடக்கவே இல்லை என்பதால் அதைக் கணிப்பது கடினம். நான் வெற்றி பெற்றேன்; உணவகத்தைத் தொடங்கினேன்; இன்னும் இந்தத் துறையிலேயே எனக்குப் பிடித்தமான சமையலைச் செய்துகொண்டு இருக்கிறேன். இந்தப் பயணம் அமைந்த விதத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
2. நீங்கள் உங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் சமையல் கலைக்கு வந்தீர்கள். உணவை தீவிரமாகப் பின் தொடர வேண்டும் என்று உங்களுக்கு எப்போது தோன்றியது?
சமையல் எப்போதும் என் அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியாகவே இருந்துள்ளது. அது என் சிறுவயதிலிருந்தே என்னுடன் பயணிக்கும் ஒன்று. எனக்குச் சாப்பிடுவது, புதிய உணவுகளைக் கண்டறிவது, வெவ்வேறு கலாச்சாரங்களின் உணவுகளை முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக நான் நேசிக்கும் மனிதர்களுக்குச் சமைத்துப் போடுவது மிகவும் பிடிக்கும்.
எனவே, மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சீசன் 10 போட்டியாளர்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, ‘நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது?’ என்று நினைத்தேன். விண்ணப்பித்தேன், நம்பிக்கையுடன் அந்த அடியை எடுத்து வைத்தேன்; அதிர்ஷ்டவசமாக எல்லாமே நன்றாக அமைந்தது. அவர்கள் சொல்வது போல், அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.
3. ஒரு போட்டியாளரிலிருந்து ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக மாறியிருக்கிறீர்கள் — மறுபக்கத்தில் (நடுவர் இருக்கையில்) அமர்ந்திருப்பது எப்படி உணர்கிறது?
நேர்மையாகச் சொன்னால், இது ஒரு கனவு போல உணர்கிறது. செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்க அழைப்பு வந்தபோது நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியாவில் போட்டியாளராக இருந்து அந்த அனுபவத்தை நான் நேரடியாக உணர்ந்தவன். கடிகாரம் ஓடிக்கொண்டிருக்க, அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்க, சவால்கள் தூக்கி எறியப்படும்போது அந்தச் சமையல் மேடையில் நிற்பது எப்படிப்பட்ட உணர்வு என்பது எனக்குத் துல்லியமாகத் தெரியும்.
இது எளிமையான போட்டியல்ல. அந்த அளவுக்கு அழுத்தத்திற்கு மத்தியில் சமைக்கும் போது உணர்வுரீதியாக நிறைய விஷயங்கள் நடக்கும். எனவே, இப்போது நான் மேசையின் மறுபக்கத்தில் இருப்பதால், எனது பங்கிற்கு அனுதாபத்தையும் உணர்வுபூர்வமான புரிதலையும் கொண்டு வருவேன். அந்த அனுபவத்தை நானே கடந்து வந்திருப்பதால், ஒரு போட்டியாளரின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு போட்டியாளராக இருப்பதே தனி உலகம். நீங்கள் உணவைப் பற்றி மட்டும் யோசிப்பதில்லை; அழுத்தம், எதிர்பார்ப்புகள், தவறு செய்து விடுவோமோ என்ற பயம் மற்றும் உங்களை நிரூபிக்க வேண்டும் என்ற ஏக்கம் என பலவற்றையும் எதிர்கொள்கிறீர்கள். இவை அனைத்தையும் நான் அனுபவித்திருப்பதால், போட்டியாளர்களுடன் இன்னும் ஆழமான நிலைப் புரிதலோடு இணைய முடியும் என்றும், அவர்கள் என்ன கடந்து செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களுக்குள் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொணர உதவ முடியும் என்றும் நம்புகிறேன்.
4. நீங்களே ஒரு போட்டியாளராக இருந்ததால், நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் மீது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பரிவு இருக்கிறதா?
நிச்சயமாக. நான் அவர்கள் இருந்த இடத்தில் இருந்திருக்கிறேன். மாஸ்டர்செஃபினுடைய ஒரு முழு சீசனையும் நானே கடந்து வந்திருக்கிறேன், அதனால் தொடக்கம் முதல் முடிவு வரையிலான அனுபவம் எனக்குப் புரியும். ஒவ்வொரு சவாலிலும் வரும் அழுத்தம், ஏற்ற இறக்கங்கள், விறுவிறுப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நான் அறிவேன். அதனால் இயல்பாகவே போட்டியாளர்கள் மீது எனக்கு ஆழமான அனுதாபமும் பரிவும் உண்டு.
மாஸ்டர்செஃப் எளிமையான வடிவம் கொண்டதல்ல. அதற்கு உலகளாவிய நற்பெயரும் மிகயுயர் தரமும் உண்டு, மேலும் வீட்டிலிருந்து பார்ப்பவர்களுக்குக்கூட சில சவால்கள் சாத்தியமே இல்லாதவை போலத் தோன்றும். ஆனால் அதுவே மாஸ்டர்செஃபின் அழகும் கூட என்று நான் நினைக்கிறேன்.
ஒரு நுட்பமான இனிப்பாகட்டும், சவாலான நுணுக்கங்கள் நிறைந்த உணவாகட்டும் அல்லது உங்களது வழக்கமான பாணியை மீறிய ஒன்றாகட்டும், உங்களால் முடியாது என்று நீங்கள் நினைத்தவற்றை உருவாக்க அது உங்களுக்குச் சவால் விடுகிறது. எனவே, ஒரு போட்டியாளர் தடுமாறுவதைப் பார்க்கும்போது, எனக்கு முன்னால் இருக்கும் உணவை மட்டும் நான் பார்ப்பதில்லை. அந்த உணவின் பின்னணியில் இருக்கும் மனிதரையும், அவர் என்ன மனநிலையில் இருப்பார் என்பதையும் நான் புரிகிறேன். அந்த அனுபவம் நிச்சயமாக நான் தீர்ப்பு அளிக்கும் விதத்தையும் அவர்களிடம் பழகும் விதத்தையும் வடிவமைக்கும் என்று நினைக்கிறேன்.
5. ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ அதன் ஆஸ்திரேலிய பதிப்பிலிருந்து எவ்வளவு வேறுபட்டது?
இதன் வடிவம் மிகவும் ஒன்றாக இருக்கிறது, ஏனென்றால் இறுதியில் இதுவும் ‘மாஸ்டர்செஃப்’தான். உலகம் முழுவதிலும் இதன் அடிப்படை வடிவம் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழைப் பொறுத்தவரை, தமிழ் ரசிகர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் ரசிக்கும்படியும் மாற்றியுள்ளனர். இதில் பொழுதுபோக்கு, ஜாலி மற்றும் சிரிப்பலைகள் அதிகம் கலந்துள்ளன.
இருப்பினும், சமையல்தான் பிரதான குறியாக உள்ளது. நாங்கள் உண்மையான மாஸ்டர்செஃப் வடிவத்திலிருந்து பெரிதாக விலகவில்லை; உணவிற்கே முன்னுரிமை என்பதையும், சமையலின் தரம் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்துள்ளோம். எனவே, பார்வையாளர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கும் சுவாரஸ்யமும் அதே சமயம் தீவிரமான சமையல், படைப்பாற்றல் மற்றும் சிறந்த உணவும் இதில் இருக்கும். மாஸ்டர்செஃப்பில் மக்கள் விரும்புவதற்கும், தமிழ் மக்களுக்குப் பிடிக்கும் அம்சங்களுக்கும் இடையே இது ஒரு நல்ல சமநிலையை உருவாக்கியுள்ளது.
6. உங்களுக்கு இந்திய பாரம்பரியம் உள்ளது, அதே நேரம் சிங்கப்பூரில் வளர்ந்தீர்கள். நீங்கள் சமைக்கும் விதத்திலும் உணவைப் பார்க்கும் விதத்திலும் இந்த இரண்டு உணவுப் பண்பாடுகளும் எவ்வாறு வெளிப்படுகின்றன?
எனது இந்திய பாரம்பரியம் மற்றும் நான் சிங்கப்பூரில் வளர்ந்த விதம் ஆகிய இரண்டுமே என் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சிங்கப்பூரில் வளர்ந்த ஒரு தென்னிந்தியனாக, சிறுவயதிலிருந்தே இந்திய, சீன மற்றும் மலாய் உணவுகளுடனும், நவீன சமையல் முறைகளுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம் இன்று நான் சமைக்கும் விதத்தையும் உணவைப் பார்க்கும் கோணத்தையும் பலமாகப் பாதித்துள்ளது. மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியாவில் அது எனக்கு ஒரு கூடுதல் பலமாக இருந்தது, ஏனென்றால் நான் ஒரே ஒரு உணவு முறைக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை.
சிங்கப்பூரின் அழகே, வெவ்வேறு உணவுப் பண்பாடுகள் ஒன்றாக இணையக் கூடிய விதத்தில்தான் உள்ளது. வீட்டில்கூட ஒரே மேஜையில், சில நேரங்களில் ஒரே தட்டில் வெவ்வேறு கலாச்சாரங்களின் சுவைகளைக் கொண்ட உணவைச் சாப்பிடுவது மிகவும் இயல்பான ஒன்று. மாஸ்டர்செஃப்பில் அந்தச் சேர்க்கை எனக்கு மிகவும் இயல்பாக வந்தது. இந்திய சுவைகளையும் நுட்பங்களையும் சீன அல்லது மலாய் தாக்கங்களுடன் என்னால் இணைக்க முடிந்தது, அது எப்போதுமே செயற்கையாகத் தெரிந்ததில்லை.
நடுவர்கள் அதை மிகவும் ரசித்தார்கள், ஏனென்றால் அந்த உணவு முற்றிலும் இந்திய உணவாக மட்டுமே இல்லாமல், எனது பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் தைரியமான சுவைகளையும் வலுவான பொருட்களையும் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்தச் சுவைகளை மேலும் நவீன மற்றும் தொழில்முறை நுணுக்கங்களுடன் படைப்பதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது. உணவைப் பற்றி, அதை மக்களுக்கோ அல்லது எனது உணவக வாடிக்கையாளர்களுக்கோ படைக்கும் விதத்தைப் பற்றி எனக்கு ஒரு புதிய பார்வையை அது கொடுத்தது.
எனவே, ஒரு சமையல் கலைஞராக என்னை வடிவமைப்பதில் எனது இந்திய பாரம்பரியமும் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார வளர்ப்பும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளன என்று நினைக்கிறேன். அந்த உணவு முறைகளின் கலவைதான் நான் யார் என்பதையும் நான் எப்படிச் சமைக்கிறேன் என்பதையும் தீர்மானிக்கிறது.
7. இத்தனை ஆண்டுகளில், எப்போதாவது சமையலையே கைவிட்டு விடலாம் என்று யோசித்த தருணம் உண்டா?
துரதிர்ஷ்டவசமாக, சொல்கிறேன். ஆம். நான் உண்மையிலேயே சமையலை விட்டுவிடலாம் என்று யோசித்த ஒரு தருணம் இருந்தது; கோவிட் காலத்தில் பல சமையல் கலைஞர்களும் அதை உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கோவிட் தொற்றுநோய் ஒட்டுமொத்த விருந்தோம்பல் துறையையுமே உலுக்கிப் போட்டது. என்னைப் பொறுத்தவரை, அந்த நேரம் மிகவும் கடினமாக இருந்தது; ஏனென்றால் அக்டோபர் 2019-ல் ‘கஜா பை சஷி’ (Gaja by Sashi) என்ற எனது உணவகத்தைத் திறந்தேன், மார்ச் 2020-க்குள் தொற்றுநோய் காரணமாக அதை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நாங்கள் தொழிலைத் தொடங்கி ஐந்து மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் இந்த மூடல்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலை ஏற்பட்டது. உணவகத்திற்காகப் பண ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் அவ்வளவு முதலீடு செய்திருந்ததால், அது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில், தொழிலைத் தக்கவைத்துக்கொள்வது, பிழைத்திருப்பது மற்றும் உணவகத்தை மூடிவிடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே எனது ஒரே குறிக்கோளாக மாறியது.
அந்தப் பயணத்தில் எங்கோ ஒரு இடத்தில், சமையலின் படைப்பாற்றல் பக்கத்தை நான் இழந்தேன். உணவை உருவாக்கி அதை மக்களுக்குப் பரிமாறுவதில் இருந்த மகிழ்ச்சியை இழந்தேன், ஏனெனில் தொழிலைக் காப்பாற்றுவதில் மட்டுமே என் கவனம் முழுமையாக இருந்தது. ஆனால் எனது குடும்பத்தின், குறிப்பாக எனது மனைவியின் ஆதரவால், என்னால் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது. அவர் எனது பலத்தின் மிகப்பெரிய தூண்களில் ஒருவராக இருந்தார்.
நான் தொழிலை நடத்துவதில் கவனம் செலுத்தியபோது, அவர் வீட்டில் உள்ள அனைத்தையும் பார்த்துக்கொண்டார்; நான் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான ஆதரவையும் சுதந்திரத்தையும் கொடுத்தார். நேர்மையாகச் சொன்னால், அவருடைய ஊக்கமும் உற்சாகமும் இல்லையென்றால் இந்தத் துறையில் நான் நீடித்திருப்பேனா என்று தெரியாது. எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தைக் கடந்து வரவும், மீண்டும் உணவு மற்றும் சமையல் மீதான எனது காதலைக் கண்டடையவும் அவர் எனக்கு உதவினார்.
திரும்பிப் பார்க்கும்போது, ஒரு சமையல் கலைஞராகவும் தொழில் அதிபராகவும் எனது மன உறுதிக்குக் கோவிட் ஒரு உண்மையான சோதனையாக இருந்தது. சில நேரங்களில், உங்களை இயங்க வைப்பது சமையல் மீதான ஆர்வம் மட்டுமல்ல, கடினமான சூழ்நிலைகளில் உங்கள் அருகில் நிற்கும் மனிதர்களும்தான் என்பதை அது எனக்கு நினைவூட்டியது.
8. இந்த நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபுவுடன் பணியாற்றுவது எப்படி இருக்கிறது?
சமந்தா இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு உணர்வுபூர்வமான கோணத்தைக் கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன். நமது நட்சத்திரத் தொகுப்பாளராக (Celebrity host), அவர் மிகவும் நடுநிலையாக இருந்து இந்த அனுபவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து போட்டியாளர்களுடன் உரையாடுகிறார், தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் உணவைச் சுவைத்துப் பார்க்கும் நேரங்களில் எங்களுடன் அமர்ந்து போட்டியின் அந்தப் பக்கத்திலும் ஈடுபடுகிறார். சமையலறைக்கு ஒருவித பரிவையும் மென்மையான உணர்வுபூர்வமான பிணைப்பையும் அவர் கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன்.
போட்டியாளர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அந்த மனிதநேய அடிப்படையில் அவர்களுடன் இணையக்கூடிய ஒருவர் இருப்பது மிகவும் முக்கியம். அவர் தனது சொந்த உணவு அனுபவங்களையும் அறிவையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார், அது நிகழ்ச்சிக்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கூட்டுகிறது. எனவே, நாங்கள் சமையல் கலைஞர்களாகவும் நடுவர்களாகவும் உணவைச் சமையல் நுணுக்கங்களின் கோணத்தில் பார்க்கும்போது, சமந்தா அந்த உணர்வுபூர்வமான, மனிதநேயப் பிணைப்பைக் கொண்டு வருகிறார். அவர் நிச்சயமாகக் குழுவிற்கு ஒரு மிகப்பெரிய பலம், மேலும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சிக்கு அவர் முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தைக் கொடுக்கிறார்.
9. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் மேலும் இரண்டு சமையல் கலைஞர்களுடன் இணைந்துள்ளீர்கள். சுவை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றிருக்க,
ஒரு உணவு அல்லது சுவை குறித்து உங்கள் மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது, எப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?
ஓ, நிச்சயமாக. நாங்கள் ஒரு சிறந்த குழு என்று நினைக்கிறேன். எங்கள் ஒவ்வொருவருக்கும் சமையலில் வெவ்வேறு பின்னணி உள்ளது, அந்தப் பலங்கள் ஒன்றோடொன்று மிகவும் நன்றாகப் பொருந்துகின்றன. தொலைக்காட்சி நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான நடுவர் குழுவை அமைத்துள்ளது என்று நினைக்கிறேன். ‘செஃப்’ வெங்கடேஷ் பட் அளப்பரிய அனுபவத்தைக் கொண்டு வருகிறார்.
அவர் இந்தத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருக்கிறார்; பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்; நூற்றுக்கணக்கான சமையல் குறிப்புகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்; மேலும் பல ஆண்டுகள் ஒரு சமையல் கலைஞராகவும் நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். எனவே அவரது அனுபவம் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய சொத்து. அவர் தனது ஆழமான அறிவைக் கொண்டு வருகிறார்,
மேலும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், சில நேரங்களில் ஸ்ரீயாவுக்கும் எனக்கும் வழிகாட்டுகிறார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் ஏதேனும் இருக்கும். அடுத்ததாக ‘செஃப்’ ஸ்ரீயா, எங்கள் இனிப்பு வகைகளின் ராணி (Dessert queen). பேக்கரி மற்றும் இனிப்பு வகைகளில் அவருக்கு அசாத்தியமான அறிவு உள்ளது, மேலும் நடுவர் மேசைக்கு அவர் முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையைக் கொண்டு வருகிறார்.
நான் ஒரு உலகளாவிய பார்வையைக் கொண்டு வருகிறேன். மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியாவில் போட்டியாளராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு; சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலாய் உணவுகளின் பரிச்சயம் எனக்கு உள்ளது, அதே நேரத்தில் எனது வேர்கள் மூலம் தமிழ் உணவோடும் எனக்கு வலுவான தொடர்பு உள்ளது.
எனவே நாங்கள் மூவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளில் இருந்து, வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்துடன் வந்துள்ளோம். ஒன்றாக இணைந்து, போட்டியாளர்களுக்கு மிகப்பரந்த அறிவையும் பார்வைகளையும் எங்களால் வழங்க முடிகிறது என்று நினைக்கிறேன். இது மாஸ்டர்செஃப் குடும்பத்திற்கு ஒரு அற்புதமான சேர்க்கை, மேலும் இந்த நடுவர் குழுவில் ஒரு அங்கமாக இருப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன்.
10. உங்கள் குடும்பத்திற்காகக் கடைசி உணவைச் சமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்த மேஜையில் என்னென்ன உணவுகள் இருக்கும்?
இது ஒரு கடினமான கேள்வி, ஏனென்றால் நான் வீட்டில் இருக்கும்போது என் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடும் உணவுகள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று நிச்சயமாக என்னுடைய ‘லாம்ப பிரியாணி’ (Lamb Biryani). நான் செய்யும் முறையை என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
அதில் ரம்பை இலை (Pandan leaf) மற்றும் எலுமிச்சை புல் (Lemongrass) போன்ற சுவைகளை நான் சேர்ப்பேன், எனவே இது தென்கிழக்கு ஆசியாவும் இந்தியாவும் சந்திக்கும் ஒரு தனித்துவமான சேர்க்கை. இதில் வழக்கமான பிரியாணியின் சுவைகளும் இருக்கும், அதே நேரம் அந்தச் சிறிய தென்கிழக்கு ஆசியத் தாக்கமும் இருக்கும்; அதுவே அதை எனக்கு மிகவும் நெருக்கமானதாகவும் வித்தியாசமானதாகவும் மாற்றுகிறது.
என்னுடைய ‘சிக்கன் ரைஸும்’ (Chicken rice) நிச்சயமாக மேஜையில் இருக்க வேண்டும். நானும் என் மனைவியும் சிங்கப்பூரில் வளர்ந்தவர்கள், அதனால் சிக்கன் ரைஸ் எப்போதும் எங்கள் மனதிற்கு நெருக்கமானது. அது எங்கள் இருவருக்குமே நிறைய சிறுவயது நினைவுகளைக் கொண்டுவருகிறது.
கண்டிப்பாக, எனக்குப் பிடித்த அன்னாசி பழ டார்ட் (Pineapple tart) இனிப்பு இல்லாமல் உணவை முடிக்க முடியாது. எனவே என் குடும்பத்திற்கு ஒரு இறுதி உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அது மட்டன் பிரியாணி, சிக்கன் ரைஸ் மற்றும் அன்னாசி பழ டார்ட் — எனது குடும்பம், என் வளர்ப்பு மற்றும் நான் நேசிக்கும் உணவை உண்மையாகப் பிரதிபலிக்கும் ஒரு சேர்க்கை!
11. சமையலறையில் நீங்கள் ரகசியமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு குறுக்குவழி (Shortcut)?
அவசரத்திற்கு ஒரு இனிப்பு செய்ய மைக்ரோவேவைப் பயன்படுத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை: சாக்லேட் லாவா கேக் (Chocolate lava cake)! எனது உணவகத்தில் உண்மையில் மைக்ரோவேவ் கிடையாது, ஏனென்றால் எல்லாவற்றையும் முதலிலிருந்தே புதிதாகச் சமைத்து வாடிக்கையாளர்களுக்குப் புதிய உணவை வழங்குவதில்தான் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால் வீட்டில், எனக்குத் திடீரென இனிப்பு சாப்பிடத் தோன்றி, சமையலறையில் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை என்றால், மைக்ரோவேவ் நிச்சயமாக எனக்குச் சிறந்த நண்பனாக இருக்கும். அதனால் ஆம், மைக்ரோவேவில் சட்டென்று செய்யப்படும் சாக்லேட் லாவா கேக் நான் தாராளமாக அனுமதிக்கும் ஒரு குறுக்குவழி!
12. பிழைப்பிற்காகச் சமைப்பது, என்றாவது வீட்டில் சமைக்கக் கூடாது என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறதா?
கண்டிப்புமாக இல்லை. எனக்கு ன் குடும்பத்திற்கும் வீட்டில் சமைப்பது மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், நான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் சமையலறை என்னுடையதுதான்! நான் வெளியில் இருக்கும்போது, என் மனைவி அல்லது என் இளைய மகன் ரியான் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். ஆனால் நான் வீட்டிற்கு வந்தவுடனேயே, மீண்டும் சமையலறைக்குள் சென்று பெரும்பாலான சமையலை நானே செய்துவிடுவேன். என் குடும்பத்திற்குச் சமைத்துப் போடுவதை நான் உண்மையிலேயே நேசிக்கிறேன், எதற்காகவும் அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்; ஏனென்றால் அங்கிருந்துதான் சமையல் மீதான என் காதலே தொடங்கியது.
என் குடும்பத்தினர்தான் எனது சிறந்த விமர்சகர்கள். ஒரு உணவு நன்றாக இருக்கிறதா, கெட்டிருக்கிறதா அல்லது அதில் முன்னேற்றம் தேவையா என்பதை என் முகத்திற்கு நேராகச் சொல்பவர்கள் அவர்கள்தான். அவர்களிடம் இருந்து எனக்கு முற்றிலும் நேர்மையான கருத்துகள் கிடைக்கின்றன, அதை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அல்லது தொழில்முறையாக எவ்வளவு சமைத்தாலும், வீட்டில் இருக்கும் போதெல்லாம் என் குடும்பத்திற்காகச் சமைக்கவே விரும்புவேன். சமையலின் அந்தப் பகுதி எனக்கு என்றைக்குமே ஒரு வேலையாகத் தோன்றாது என்று கூறியுள்ளார்.
